பெங்களூரில் இன்னொரு சோகம் :(
பெங்களூரில் விஞ்ஞானி சுட்டுக்கொலை * காரில் வந்த தீவிரவாதிகள் அட்டூழியம்
பெங்களூர்: பெங்களூரில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) நிறுவனத்தில் நேற்று மாலை நடந்த தீவிரவாதிகளின் பயங்கர துப்பாக்கிச் சூட்டில் விஞ்ஞானி ஒருவர் பலியானார். மற்றொரு விஞ்ஞானி உட்பட ஆறு பேர் பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக பெங்களூர் போலீசார் கூறியதாவது:
பெங்களூரில் புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள ஜே.என்.டாடா ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை சர்வதேச அளவிலான மாநாட்டு நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஐந்து பேர் அடங்கிய கும்பல் அம்பாசிடர் கார் ஒன்றில் வேகமாக வந்தது.
ஐ.ஐ.எஸ்.சி., வளாகத்திற்குள் வந்த அவர்கள் மாநாடு நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியம் அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கி உள்ளே வந்தனர்.
உள்ளே வந்தவர்கள் ஏ.கே.47 துப்பாக்கியால் கண்மூடித்தனமாக மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் மேடையில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். மாலை 7.00 மணி அளவில் இந்தப் பயங்கரச் சம்பவம் நடந்தது.
இந்த பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் விஞ்ஞானி ஒருவர் பலியானார். மற்றொரு விஞ்ஞானி உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் எம்.எஸ்.ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலையில் நடந்த இச்சம்பவத்தால் பெங்களூர் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட விஞ்ஞானியின் பெயர் பேராசிரியர் எல்.என்.பூரி. இவர் டில்லி இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி., )யில் பணிபுரிபவர். காயமடைந்த விஞ்ஞானி விஜய்சந்துரு என்பவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சங்கீதா, படேல் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது.
விஞ்ஞானிகளை சுட்டவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்ததும் போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.
இந்தியன் இன்ஸ்டியூன் ஆப் சயின்ஸ் நிறுவனம் ஏற்கனவே பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்இதோய்பா தீவிரவாத அமைப்புகள் உட்பட பல தீவிரவாத அமைப்புகளின் தாக்குதல் பட்டியலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் அஜய் குமார் கூறுகையில், ""இது தீவிரவாதிகள் தாக்குதலா இல்லையா என்பதை தற்போதைய நிலையில் எதுவும் தெரிவிக்க முடியாது. சம்பவத்தில் தானியங்கி சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் எப்படி வந்தனர் அவர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை,'' என்று கூறினார்.
மாநாட்டு நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரிய நிர்வாகி கூறுகையில், ""மாலை 7.00 மணி அளவில் வெள்ளை நிற அம்பாசிடர் காரில் வந்த நான்கு பேர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தவுடன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவர்கள் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டனர்,'' என்றார்.
இதுமட்டுமின்றி, ஐ.ஐ.எஸ்.சி.,வளாகத்தில் வெடிகுண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூர் தலைமைச் செயலகம் உள்ள பகுதி உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடும் வேட்டையும் குவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்.காம் type="text/javascript">&cmt=0&postid=113584990934472864&blogurl=http://srishiv.blogspot.com/">