கார்த்திகை தீபத்திருநாள் - திருவருணையில் கொடியேற்றம்
தி.மலையில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம்: கொட்டும் மழையில் பக்தர்கள் குவிந்தனர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் கொட்டும் மழையில் நடந்தது.
ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதி வடிவாய் சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலாகும். பிரம்மா, விஷ்ணு இவர்கள் "தான்' என்ற அகந்தையை நீக்கி, இறைவன் ஒருவனே உயர்ந்தவன் என்பதை உலகிற்கு உணர்த்தியதோடு, ஆணும், பெண்ணும் சமம், என்பதையும் உலக உயிர்களுக்கு உணர்த்தி உமையாள் பார்வதி தேவிக்கு இடப்பாகம் அளித்த முக்தி திருத்தலம்தான் திருவண்ணாமலையாகும்.
இந்த நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகா தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீபத்திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், மூலவர் ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. பின் பெரிய விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, ஸ்வாமி, அம்பாளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்ரமணியர், உண்ணாமலை உடனாகிய அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒடல், தாளம் முழங்க தங்க கொடிமரம் அருகே அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. ரிஷப யாகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, 32 பரிவார தேவதைகளுக்கு படையல் இட்டு தீபத்திரு விழாவை சிறப்பாக நடத்தித்தருதல் வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
பஞ்ச மூர்த்திகளுக்கு வேண்டுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6.01 மணிக்கு "அண்ணாமலைக்கு அரோகரா' என பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க குமார் குருக்கள் தீபத்திருவிழா கொடயேற்றத்தை நடத்தி வைத்தார். கொடியேற்ற நிகழ்ச்சியின் போது கன மழை பெய்தது. கொட்டும் மழையிலும் கூடியிருந்த பக்தர்கள் குடை பிடித்தப்படி "அண்ணாமலையாருக்கு கோஷம்' எழுப்பி வழிப்பட்டனர்.
கொடியேற்ற விழாவையொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக கோயிலில் ஸ்வாமிகள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தொடர் மழை இருந்த போது வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் இளவரசு பட்டம் ரமேஷ் குருக்கள், தியாகராஜ குருக்கள், கார்த்தி குருக்கள், அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர்(பொறுப்பு)சீனிவாச ராகவன், ஆர் .டி.ஓ., அன்பரசு, கோயில் துணை ஆணையர் ஜெயராமன், கோயில் மணியக்கார் சாமிக்கண்ணு, அறங்காவல் குழு உறுப்பினர்கள், நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைர கிரிடமும், உண்ணாமலை அம்மனுக்கு தங்க கவசமும், சார்த்தி விஷேச பூஜைகள் நடந்தது. பின் பஞ்ச மூர்த்திகள் 16 கால் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு வெள்ளி விமானங்களில் அலங்கரிக்கப்பட்டு அதிர்வேட்டு முழங்க பஞ்சமூர்த்திகள் மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்..
இரவு விநாயகர் மூஷிகம் வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் அதிகார நந்தி வாகனத்திலும், உண்ணாமலையம்மன் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன அதிகார நந்தி வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நன்றி: தினமலர்.காம் (05-12-05) type="text/javascript">&cmt=0&postid=113377501135117550&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home