இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Thursday, November 24, 2005

ஐ.ஐ.டி.,க்களில் சேர புதிய விதிமுறைகள்

ஐ.ஐ.டி.,க்களில் சேர புதிய விதிமுறைகள் : வரும் கல்வி ஆண்டு முதல் அமலாகிறது


புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.,க்களில் மாணவர்கள் சேர வரும் கல்வி ஆண்டு முதல் புதிய விதிகளை உள்ளடக்கிய "கூட்டு நுழைவுத் தேர்வு முறை' அமல் படுத்தப்படுகிறது. கோல்கட்டாவில் நடந்த ஐ.ஐ.டி., இயக்குனர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி., மற்றும் எம்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் கூட்டு நுழைவுத் தேர்வில் பெறும் "ரேங்க்' அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த தேர்வில் பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே கலந்து கொள்ளலாம். இதற்காக தனியாக மதிப்பெண் தகுதியும் கிடையாது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுக்கான விதிமுறைகளை மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி "புதிய கூட்டு நுழைவுத் தேர்வு' நடத்தப்பட இருக்கிறது. இந்த புதிய நடைமுறைக்கு கோரக்பூர் ஐ.ஐ.டி., முன்மாதிரியாக இருக்கும் என்று அதன் இயக்குனர் சுஷிர் துபே தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:
கூட்டு நுழைவுத் தேர்வில் புதிய விதிமுறைகள் புகுத்துவது குறித்த முடிவுக்கு கடந்த செப்., 17ல் கோல்கட்டாவில் கூடிய "கூட்டு சேர்க்கை வாரியம் (ஜாய்ன்ட் அட்மிசன் போர்டு)' ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து ஐ.ஐ.டி., இயக்குனர்கள், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் தான்பெட் ஐ.எஸ்.எம்., கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த புதிய விதிமுறைகளின்படி நுழைவுத் தேர்வு எழுதும் மாணவன் பத்தாவது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித பாடங்களின் மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் கோச்சிங் சென்டர்களை நம்பி இருக்கும் நிலைமை மாறி பள்ளிப் பாடங்களில் அதிக நேரம் செலவிடும் நிலைமை உருவாகும். பள்ளி முதல்வர்கள் மற்றும் பெரும்பாலான பெற்றோர்கள் இந்த நடைமுறையை வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் தரமான மனித சக்தியின் தேவை அதிக அளவில் உள்ளது. ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் திறமையானவர்களை உருவாக்குவதன் மூலமாக இதை பூர்த்தி செய்ய முடியும். இதற்கு மூன்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். முதலாவதாக, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இரண்டாவது, புதிய ஐ.ஐ.டி.,க்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, சில குறிப்பிட்ட ஐ.ஐ.டி.,க்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.
ஐ.ஐ.டி.,க்கள் முழுவதும் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் நிறுவனம். எனவே, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு குறித்த கொள்கையை நேரத்திற்கு தகுந்தபடி அரசே முடிவு செய்யும்.
இவ்வாறு துபே தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் இந்தரேசன் கூறும் போது, "ஐ.ஐ.டி., சட்டப்படி ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யும் தன்னாட்சி பெற்றது. மாணவர் சேர்க்கையை ஐ.ஐ.டி.,க்கள் சிறப்பான முறையில் கையாளுகின்றன. 60 பேருக்கு ஒருவர் என்ற அளவில் இந்தியாவில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 10 பேருக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் மூலமாக இந்திய ஐ.ஐ.டி.,க்களின் தரத்தை அறிந்து கொள்ளலாம்' என்றார்.
நன்றி : தினமலர்-25-11-05
type="text/javascript">&cmt=2&postid=113290167441524945&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger சந்திப்பு said...

இதுபோன்ற அடிப்படையான தகவல்களை வழங்குவது, தமிழ்மக்களுக்கும் - இந்திய மக்களுக்கும் செய்யும் பெரும் சேவையாகும்.

Friday, November 25, 2005 12:37:00 AM

 
Blogger Dr.Srishiv said...

நன்றி சந்திப்பு,
அவசியம் செய்கின்றேன்...
அன்புடன்
ஸ்ரீஷிவ்...

Saturday, November 26, 2005 3:50:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது