இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, January 27, 2006

காதல் வலை - பகுதி 11




ஆமாம் அவளின் அந்த மடல் எனக்கும் சிறிது ஆறுதலைத்தந்த மடல்,ஆனால் அவள் அதில் கூறியிருந்த விசயங்கள், அவள் போன முறிந்த உறவில் எந்த அளவு பாதிக்கப்பட்டு வருந்தி இருந்தாள் என்பதை தெளிவாகக்காட்டியது கண்ணாடிபோல்."ஈஸ்வர், நாம நல்ல ஃபிரண்ட்ஸா இருக்கோம், அது கெட்டுப்போயிடக்கூடாது ஈஸ்வர்"

"நாம, நல்ல நண்பர்களா இருப்போம், ஒருத்தரை ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சிக்குவோம், எப்போ நமக்குத்தோனுதோ அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்"

மனம் மிகவும் மகிழ்ச்சியில் துள்ளியது, "சரி டா செல்லம், உன் இஷ்டப்படியே செய்வோம், ஆனா இப்போ என்கிட்ட ஐ லவ் யூ சொல்லேன் ப்ளீஸ்..."
"இல்லடா, அந்த வார்த்தையை நான் இப்போ சொல்லமாட்டேன், உங்க வீட்டுல எங்க வீட்டுல ரெண்டுபக்கமும் அப்பா அம்மா ஒத்துக்கிட்டப்புறம் நீ என் கழுத்துல மூனுமுடிச்சு போடுவ இல்ல? அந்த மேடைல நீ மூணாவது முடிச்சி போடறப்போ உன் காதுல சொல்வேண்டா....."

இப்பொழுதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பது அவள் சொன்ன அந்த வார்த்தைகள்தான்...அதன்பின் தினமும் அவளின் வார்த்தைகளே என் தாலாட்டு, இரவினில் உறங்கும்முன் என் சோகத்தினை பகிர்ந்துகொள்வாள். அவளிடமும் உள்ள சோகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத்தெரியவந்தது. எவ்வளவோ பேசினோம், அவள்வேலையும் இல்லாமல் இருந்ததால் அழைக்க அவளிடம் பணம் இல்லை அந்த சமயம் அவளிடம் பேசியது எப்படி? அதுவும் ஒரு இனிமையான சுவாரசியமான சம்பவமே....:) உங்களுக்கு எல்லாம் விசிசி கார்டு என்னும் இந்திய தொலைபேசி அட்டை தெரியும் என்றே நம்புகின்றேன். அந்த அட்டையில் உள்ள எண்ணைப்பயன்படுத்தி எங்கிருந்து வேண்டுமானாலும் பொது தொலைபேசியிலிருந்தும் பேசலாம். அது பொது தொலைபேசி கணக்கில் வராது, இந்த அட்டையிலிருந்து பணம் கழித்துக்கொள்ளப்படும்.

தில்லியிலிருந்து அவளுக்கு அந்த தொலைபேசி அட்டையின் எண்ணை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க, அதனைக்குறித்து வைத்துக்கொண்டு இரவில் என் செல் தொலைபேசிக்கும் ஆய்வுச்சாலைக்கும் அழைத்துப்பேசுவாள். மனம் விட்டுப்பேசுவோம். பல விசயங்களைப்பகிர்ந்துகொண்டோம், எத்தனை நாட்கள், எத்தனை இரவுகள்? இந்த பாசம் வேறுவிதமாக இருந்தது. இதுவரை தோழியாக மட்டுமே பார்த்த அவளை என் காதலியாக இல்லை இல்லை மனைவியாக பார்த்து பேசத்துவங்கினேன். எத்தனையோ விடயங்கள், பல திட்டங்கள், இடையில் அவளுக்கு வேலை தேடலுக்காக கல்விக்கு ஆலோசனை என்று பலவும் இருந்தன. என் பல தோழர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். வேலைக்காக விண்ணப்பங்களை நானே அவள் சார்பாக அனுப்பத்துவங்கினேன். இதற்கிடையில் அந்த மேமாதமும் வந்தது, ஊருக்குச்செல்லவேண்டும், நினைக்கவே மனதிற்கு சுகமாக இருந்தது, நான் சென்ற பயணங்கள் எல்லாம் இதுநாள் வரை ஒரு அர்த்தமின்றி தேடல்களுடன் இருந்தன, இந்த பயணம்தான் முதன்முறையாக ஒரு தெளிவான நோக்கத்துடன் அவளை சந்திக்கச்செல்லும் பயணமாக இருந்தது...என் மாது.....சொல்லவே என்ன சுகமாக இருக்கின்றது? தில்லியிலிருந்து அவளுக்குத்தகவலளித்துவிட்டு கிளம்பினேன், எனக்காக செண்ட்ரலில் காத்திருப்பதாகக்கூறியிருந்தாள், வண்டி செண்ட்ரலை நெருங்கியது....மனமெங்கும் ஒரு பதட்டம், கண்கள் அவளைத்தேடினாலும் இதயத்தில் ஒரு ஒளி, அவள் கேட்டிருந்த ஆரக்கிள், விசுவல் பேசிக் மென்பொருட்களுடன் அவளைத்தேடினேன், சமயம் பார்த்து, என் செல்தொலைபேசியிலும் மின்னூட்டு குறைந்துபோக, தவித்த படி தேடினேன், அவள் பிளாட்பாரத்தில் இல்லை......:(
தொடர்வேன்...
type="text/javascript">&cmt=1&postid=113837817573763971&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, January 19, 2006

வார்த்தைகள்


வார்த்தைகள்

எவ்வளவு வலிமையானவை?
அணுகுண்டை விட வலிமை வாய்ந்தவை
காலதாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்
இருந்தும் என்ன பயன்?

கடந்துபோனவை கடந்துபோனவை தானே?
என்னவோ என்னவோ பிடிச்சிருக்கு???
யாரோ கூறிய கூற்று நினைவிற்கு வந்தது
"துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டும்
வாயிலிருந்து விடுபட்ட வார்த்தையும்
திரும்பி வரவே வராது"

என்ன ஒரு கூற்று?
சரியாகவே அனுபவித்துக்கூறியவார்த்தைகள்,
என்ன பயன்?
இழந்தவை இழந்தவையே???
வலிக்கின்றதடி தோழி.....:(
வாழ்க நீ பல்லாண்டு....
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன்
உங்கள் ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=0&postid=113768322822321769&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, January 15, 2006

மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்...



இது கீற்று மின்னிதழுக்காக எழுதப்பட்ட கவிதை, அதில் பிரசுரமாகும் என்ற நம்பிக்கையில் இங்கும் என் வலைப்பூவிலும் இடுகின்றேன்...என்றும் அன்புடன்,
ஸ்ரீஷிவ்...


சிறுவயதில் என் வீட்டு
தொழுவத்தில் வீற்றிருந்த
எருதுகளும் ஆக்களுமே
கண்விட்டு அகலாது காலமும்
என் கண்களில் ஆடும்...

மாட்டுப்பொங்கல் என்றதுமே
மனதில் நின்று இடம்பெற்று
பசுமையாக வருவது என்
பசுவான லட்சுமியே..

தைப்பொங்கல் திருநாளில்
திருத்திய ஒரு திலகமிட்டு
தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி
பன்னீர் தூபம் அதைக்காட்டி
வெண்ணீர் கொண்டு முகம் கழுவி
திருநீறனிந்தே தொழுதிடுவோம்...


வடையுடன் பொங்கல் வாய் ஊட்டி,
விளையாட்டுப்பல அதில் காட்டி,
தரையில் இலையை இடம் சுட்டி,
வாயால் உண்போம் மாட்டைப்போல்.

வருடம் ஒருமுறையேனும் அந்த
வாயில்லாத ஜீவன்களின்
அருமை பெருமைகள் புரிந்திடவே
அன்னை தந்தை அருமையாக
அருளித்தந்த பாடம் இது...

கைகளை பின்புறம் கட்டி
பின் தலையை தரையில் முட்டி
வாயால் உண்ணும் உணவு
அது வயது தந்த தினவு,
சிறுவனாய் மீண்டும் மாறி
அந்த சிறுவயது ஞாபகத்தை
இன்றும் தேடுகின்றேன்
இந்த இணையவெளிதனில் எங்கும்.....


எங்கே சென்றன அந்த,
வயலும், கிராமமும், மண்ணும்???
வயலும் வாழ்வும் என்று,
இன்று தொலைக்காட்சியில் தான் பொங்கல்...
தமிழர் திருநாள் என்றே, நாம்
தலை நிமிர்ந்தே கொண்டாடிடினும்,
வறுமை போக்க வந்த
அந்த லட்சுமிக்கு சொல்வோம் நன்றி...


நாளை என்றொரு நாளை,
நம் வாழ்வில் நம்பிக்கையூட்டி,
தன்வாழ்வே கேள்விக்குறியாய், தினம்
த்வித்தே வாழும் என் மாடு,
மாடு என்றால் அது செல்வம்,
நம் மனையில் வாழும் செல்வம்,
பொங்கல் தைத்திருநாளில்
அவற்றிற்கு நாம் நன்றி சொல்வொம்


மாடுகளை வளர்ப்போம்
நம் மக்கட்பண்பையும் காப்போம்...
வாழ்க இப்பொங்கல் திருநாளில்
என வாழ்த்தி விடையும் பெறுகின்றேன்...
என்றும் வணக்கமுடன்,
உங்கள் சிவா...
பொங்கலோ பொங்கல், மாட்டுப்பொங்கல்...
type="text/javascript">&cmt=2&postid=113740950716620243&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, January 11, 2006

காதல் வலை - பகுதி 10





ஆமாம் , அவளுக்கு மனமும் உடலும் சற்று சரியில்லைதான், பின்னர்தான் அவளின் சொந்த கதைகளை என்னுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாள். என்னவோ எனக்கும் ஒரு ஆறுதலாக இருந்தது, அவளிடம் பேசுவது, வாரம் ஒருமுறை பேசுவது போய், தினம் மாலை பேச ஆரம்பித்தேன். அவளுக்காக , நண்பனிடம் செல் தொலைபேசி இரவல் வாங்கி பேசினேன். நிறைய பேசினோம், நிறைய புரிந்துகொண்டோம், ஆனால் அவற்றுள் முதன்மையாக நான் புரிந்துகொண்டது, அவளின் சுருக்கென்ற கோபமும், பொய் சொன்னால் பிடிக்கவே பிடிக்காதென்பதும்.
அதற்கு அவள் தண்டனை தரும் விதமும் வித்தியாசமாக இருக்கும், அவளை அவளே வருத்திக்கொள்வாள். ஒருவாரம் ஒருவேளை மட்டுமே சாப்பிடுவாள், முக்கியமாக என்னுடன் பேசும் பேச்சுக்களில் உயிரிருக்காது. வெறுமனே, நலமா, நலமே தான். இந்த சூழலில்தான் அவளின் பணி முடிந்ததுஅவளின் அலுவலகத்தில். வேறு வேலை கிடைக்கும்வரை வீட்டில் தான் இருக்கவேண்டும். அவளின் மின்னஞ்சல்களைக்கூட வாரம் ஒருமுறைதான் சோதிக்கமுடியும். அந்த சமயத்தில்தான் அவளின் அருமை புரிந்தது, எந்த அளவிற்கு அவளை நான் மிஸ் பன்னுகிறேன் என்று. அவளின் தந்தை அவளை சென்னை சென்று வேலை தேடச்சொல்ல, சென்னை வந்து சேர்ந்தாள் மாது. வேலைதேடுவதை ஒரு வேலையாகக்கொண்ட பல்லாயிரம் பட்டதாரிகளுள் ஒருவளாக ஐக்கியமானாள். தங்கியது அவளின் சித்தப்பா வீட்டில், அங்கிருந்த அவளின் தங்கையையும் எனக்கு அறிமுகம் செய்துவைத்தாள். ஏனெனில் அவளிடம்தான் இணைய வசதியுடன் கூடிய கணினி இருந்தது காரணம், இரவு வேளைகளில் என்னுடன் ஒரு 30 நிமிடங்கள் பேசுவாள். அதுவே அதிகம், அந்த சமயத்தில்தான் அவளின் தங்கையிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் என் மனதிலிருந்த எண்ணத்தை அவளிடம் தெரிவித்தேன். அப்போது அவள் கூறியது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது, அவளின் தங்கைக்கும் ஒரு காதலன் இருக்கும் செய்தியே அது.

அவனுடன் என்னை அவள் ஒப்பிட்டுக்கொண்டிருக்கும் செய்தியும் அன்றுதான் தெரியவந்தது. மேலும் எதுவும் வேறு கணக்குகள் அங்கு வருவதற்குள், என் மனதிலிருந்த எண்ணத்தினை அவளின் சகோதரியிடம் கேட்டுவிட்டேன் " அனு, மாதுவ நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறேன், நீங்க என்ன நெனைக்கறீங்க? என்னை தப்பா நெனச்சிக்காதீங்க"
" இல்ல ஈஸ்வர், நிச்சயம் உங்களை நான் தப்பா நெனைக்கல, நானும் என்னோட வுட்பீயும் அதைப்பற்றித்தான் போனவாரம் பேசிக்கொண்டிருந்தோம், ரொம்ப சரியா ஒருத்தர் மனசை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்ட நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துட்டா ரொம்ப பொருத்தமா இருக்கும், நீங்க நேர்ல இருந்தா உங்களை கையெடுத்து கும்பிடுவேன் ஈஸ்வர்"

என்ன சொல்வதென்று எனக்குப்புரியவில்லை, எப்படி அவளிடம் தெரிவிப்பது இதை? ஒரே வழி எப்பொழுதும் போல் மடல்தான், முதல்முறையாக என் சொந்தப்புலம்பல்கள் இல்லாத ஒரு மடலை அவள் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லைதான். "ஏன் ஈஸ்வர்? ஏன் இப்படி ஒரு மடல் எழுதினீங்க? என்ன இது? ஏன் இப்படி? " அனலிலிட்ட புழுவாக இருந்தது அவளின் மடல், "யோசிங்க ஈஸ்வர், என்ன இது? "என் கருத்தில் நான் உறுதியாக இருந்தேன்....இறுதியாக அவளிடமிருந்து ஒரு மடல்....அதில்.......
அடுத்த பகுதியில் தொடர்வேன்......
type="text/javascript">&cmt=0&postid=113705784627588999&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது