சாம்பல் நிறத்தில் ஒரு சேலை
"பட்டு சேலை காற்றாட,
பருவமேனி கூத்தாட,
பட்டுக்கூந்தல் முடித்தவளே என்னை
பார்வை வலையில் அடைத்தவளே......"
திருமண வரவேற்பில் அவளை சத்தியமாக நான் அந்த சேலையில் எதிர்பார்க்கவில்லை. என்
நினைவுகள் பின்னோக்கிச்சுழலத்தொடங்கின. எத்தனை ஆண்டுகள், எத்தனை நாட்கள்?
அவளை அந்த சேலையில் பார்க்க ஏங்கி இருக்கின்றேன்?....சுத்தமாக
15வருடங்கள்...ஆனாலும் இன்றுபோல் என் கண்ணில் தெரிகின்றது அந்த சாம்பல் வண்ண தாவணி.
முதல் நாள் , என் பன்னிரண்டாம் வகுப்பில் , அந்த கீழ்வானச்சிவப்பில் பொல
பொலவென்று விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் தனிவகுப்பிற்கு (டியூஷன்)
சென்றுகொண்டிருந்தவன், அப்படியே ஒரு கணம் மலைத்து நின்றுவிட்டேன்,
"அதிகாலை இளம் வெயில் நேரம்,
அழகான இலையுதிர் காலம்,
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே,
தொலைந்தவன் நானே....."
பனி பொழியும் மார்கழியில் ஒரு மார்கழிப்பூவாக அவள் , அந்த சாம்பல் வண்ண
தாவணியில் வாசலில் நீர் தெளித்து கோலம்போட்டுக்கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் நான் ஓட்டி வந்த ஈருருளியை நிறுத்திவிட்டேன். ஏதோ ஒரு குறு குறுப்பில் நிமிர்ந்து என்னைப்பார்த்தவள், மீண்டும் தலையைக்குனிந்துகொண்டு கோலத்தைத்தொடர்ந்தாள். எனக்குத்தான் ஈருருளி ஓடவே இல்லை, அந்த கோலத்தின் புள்ளிகளுக்கிடையில் சிக்கிய
கோடாக சிக்கிக்கொண்டது என் மனம். நகர மறுத்த ஈருருளியை மெதுவாகத்தள்ளியபடி தனிவகுப்பிற்கு சென்றமர்ந்தேன். தனிவகுப்பு முடித்து பள்ளிக்கு வந்தபோதும் அந்த நினைவாகவே இருந்தவன் மதிய உணவிற்குப்பின் வருகைப்பதிவேடு எடுத்துவர நேரமான காரணத்தினால் 1.55மணிக்கு வேகமாக தலைமை ஆசிரியரின் அறை நோக்கி வேகமாக
ஓடியவன், மின்சாரம் தாக்கியவன் போல நின்றேன், எதிரில் ஓரடிக்கும் குறைவான தொலைவில் அதே தேவதை. கண்கள் கலந்தது ஒரு சில நொடிகளே என்றாலும் காலத்திற்கும் , ஏன்? ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத அந்த கண்களை நான் சந்தித்தேன்.
பின்பு பல நிகழ்ச்சிகளில் அவளைக்கண்டாலும் , அவளை முதன்முதல் பார்த்த அந்த
சாம்பல் நிற தாவணிதான் என் நினைவில் நிற்கும். பள்ளிப்படிப்பும் முடிந்தது. கல்லூரி
காலங்களும் கடந்தன. 10 வருடங்கள் விளையாட்டுபோல கடந்தது தெரியவே இல்லை, இதில்
ஆச்சரியம் என்னவென்றால் எத்தனையோ பெண்களை இடையில் கடந்திருப்பினும் யாருமே
மனதில் நிற்காதது ஒரு அதிசயமே. மீண்டும் அவளை சந்தித்தேன், ஒரு ஆசிரியனாக.
பொறுப்பு மிக்க பேராசிரியனாக. ஒரு நல்ல மாலை நேரம், கல்லூரியில் இருந்து திரும்பியவன்
தோழனைச்சந்திக்கச்செல்லும் வழியில் அவளைச்சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. பல
ஆண்டுகள் கடந்திருந்தாலும் அப்படியே இருந்தாள் அவள். விரைந்த என் இதயத்திற்கு
இணையாக விரையமுடியாத என் இயந்திரமயமாக்கப்பட்ட ஈருருளி ஓரம் கட்டி நிற்க,
அழைத்தேன் அவளை. பதறித்திரும்பியவளின் கண்களில் அதே மருட்சி, பள்ளியில்
முதன்முதல் பார்த்த அதே பார்வை. "எங்கே போய் வர?", "மின்சாரக்கட்டணம் கட்டிட்டு
வர்றேன்", "எப்படி இருக்க? " , "நல்லா இருக்கேன்", "என்ன பன்ற?" "வீட்டுல தான்
இருக்கேன்", "என்ன அந்த சாம்பல் வண்ண தாவணி இல்லையா?", "இந்த வயசுல தாவணி
போட்டுக்கிட்டு வெளிய வருவாங்களா? சரி நான் வரேன்".
அதன் பின் அவளை சந்தித்தது ஒரு கோவில் கொடையில், கருட சேவையில் பெருமாளை
சேவித்துப்பின் திரும்பியவன், அவள் வீட்டு வாசலில் மீண்டும் அயர்ந்தேன், அம்மன் அவள்
வீட்டு வாசலில் தான் வந்துவிட்டாளோ என எண்ணுமளவிற்கு ஜகஜ்ஜோதியாக
பச்சைப்பட்டுப்புடவையில் அவள். அப்பொழுதும் என் சாம்பல் நிற சேலையும்
தாவணியும்தான் என் கண்களில் நின்றன. அவளை சாம்பல் நிற சேலையில் காண
ஏங்கித்தவமிருந்தேன். காலம் என்னை தலைநகருக்கு நாடு கடத்த, மீண்டும் அவளை
சந்திக்கமுடியாதா என ஏங்கிக்காத்திருந்த வேளையில் வந்தது எங்கள் தோழன் திருமணம். 10
நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, அவளிடமும் தெரிவிக்கச்சொல்லிவிட்டு ஆவலாக
விரைந்தேன். காலத்தின் சதி, அவளின் சிற்றன்னைக்கு நான் தாயகம் வரும் தகவல் தெரிந்து
அவளை ஊரிலே இல்லாமல் இன்னொரு சிற்றன்னையின் ஊருக்கு நாடுகடத்த,
அவளைக்காணாமலே தலைநகர் திரும்பினேன் கண்களில் நீருடன். தொலைபேசியில் கரைந்த
அவள் , எனக்காக அந்த சாம்பல் வண்ண சேலையை துவைத்து சலவை செய்து எடுத்து
வைத்திருந்ததாகக்கூறினாள். ஹ்ம்ம் இப்பொழுதைக்கு பார்க்க கொடுப்பினை இல்லை என்று
எண்ணினேன். ஆனால் இப்படி ஒரு கடிதம் வரும் என எண்ணவில்லை, அவளின் மண
ஓலையைத்தாங்கி.
திருமணம் முடிந்தபின் வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் போக முடிந்தது, இருந்த தூரத்தில்
இருந்து கடிதம் கண்டு ஊர் வர இத்தனை தாமதமானது, வீடு சென்று அந்த வரவேற்பினை
காணச்சென்றபோதுதான் கண்ணில் பளீரென அரைந்தது அவள் கட்டியிருந்த அந்த சாம்பல்
வண்ணப் பட்டுசேலை.
type="text/javascript">&cmt=10&postid=113170138213732764&blogurl=http://srishiv.blogspot.com/">