இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, April 03, 2006

செயற்கை கருப்பை - ஒரு வரம் தாய்மார்களுக்கு




தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.


இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.


இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,
""Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure," say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems."

இதற்கான சுட்டி : http://www.newscientist.com/article.ns?id=dn2014
இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.

மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர், சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு, எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இந்த இழையில் பகிர்ந்துகொள்ளலாமே?
வணக்கங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=14&postid=114408355637261172&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...





‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ _ ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம் பெற்ற இந்தச் சின்னத்திரையின் செல்லப் பாடலை பாடியிருப்பவர் ‘கானா’ உலகநாதன். இப்போது, இவர் எங்கு சென்றாலும், ஒரு ரசிகர் கூட்டம் இவரைச் சூழ்ந்து கொள்கிறது.

‘‘சினிமாவில் அப்போது என்ன பாட்டு பிரபலமோ, அந்தப் பாடலை அப்படியே கானா ஸ்டைலுக்கு மாற்றி பாடிக்காட்டுவதுதான் என்னோட ஸ்பெஷாலிடி.

இளையராஜாவின் இசையில், ‘அன்னக்கிளி’யில் வந்த ‘‘மச்சானைப் பார்த்தீங்களா... மலைவாழை தோப்புக்குள்ளே’ பாடலை, நான் எப்படிப் பாடுவேன் தெரியுமா? அப்போது ‘மில்லி’ கடைகள் தமிழ்நாட்டில் சந்து பொந்தெல்லாம் இருந்த நேரம். ஒருத்தி தன்னுடைய கணவனை சாராயக் கடையில் தேடுகிறாள். இதை நான் ‘என் புருஷனை பார்த்தீங்களா? அந்தச் சாராயக்கடைக்குள்ளே’ என்று பாடினேன். இந்தப் பாட்டை குடிமன்னர்களெல்லாம் நேயர் விருப்பமாக, என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். பாடினால் பையிலிருப்பதைக் கொடுப்பார்கள்’’ என்று கூறும் உலகநாதனுக்குப் பெளர்ணமி நிலவு என்றால், ரொம்பப் பிடிக்குமாம். குஷியில் மூடு பிய்த்துக் கொள்ளுமாம். பாட ஆரம்பித்து விடுவாராம். உடனே அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சூழ்ந்து நின்று ரசிப்பார்களாம்.


‘‘என்ன பாடி என்ன பிரயோசனம் சார்? பெரிசா ஏதும் வருமானம் இல்லை. சம்பாதிப்பது வயித்துக்கும் வாயிக்குமே பத்தும் பத்தாமல்தான் இருந்தது.

சாவு வீட்டில் பாட கூப்பிடுவார்கள்.

என் அப்பாவிற்கு நான் சாவு வீட்டில் பாடுவது மட்டும் சுத்தமாகப் பிடிக்காது. ‘டேய் இதெல்லாம் என்னடா பொழப்பு?’ என்பார். சரி இனிமே போகக் கூடாது என்று முடிவு பண்ணி இருந்தால், ஏரியா பசங்கள் கம்பெல் பண்ணி கூட்டிட்டு போயிடுவாங்க...’’ கூறிவிட்டுச் சிரித்தவர், தொடர்ந்தார்.

‘‘நான் மிகப்பெரிய ஃபுட்பால் பிளேயர். ஆனால், என்னை ஊக்கப்படுத்தத்தான் யாருமே இல்லை. குடும்பக் கஷ்டம் வேறு கழுத்தை நெரிச்சது. அதனால, அதில் என்னால் சரியான முறையில் கவனம் செலுத்த முடியலே.

எனக்கு ஒழுங்கான வருமானம் இல்லை என்பதால், வெளியில் பெண் கொடுக்கத் தயங்கினார்கள். அந்தச் சமயத்தில் என் மாமா பெண் ஷகிலா, ‘மாமா நான், ‘உன்னைக் கட்டிக்கிறேன். நீ நிச்சயம் பெரியாளா வருவே’ என்றாள். என் அப்பா உடனே அவளையே கல்யாணம் பண்ணி வைத்தார்.



முன்பு தனியார் கம்பெனியில் தான் வேலை பார்த்தேன். திடீரென்று கம்பெனியில் ஸ்ட்ரைக் வர, வேலையும் போய் விட்டது. இந்தப் பத்து வருஷமா கானா பாட்டுதான் சோறு போடுது. நான் என்ன கொண்டு வருகிறேனோ அதை வைத்து குடும்பம் நடத்துவாள் என் அருமை மனைவி ஷகிலா. ஒருநாள் கூட, ‘எனக்கு இது வேணும் அது வேணும்’ என்று அவள் கேட்டதே கிடையாது. அவள் மனது ஏதாவது வருத்தத்துடன் இருந்தால், ‘மாமா பாட்டு ஏதாவது பாடுங்க’ என்பாள். நானும் பாடுவேன். என் கன்னுக்குட்டி அந்தப் பாட்டில் கவலைகளை மறந்துடும்’’ அருகிலிருந்த மனைவி வெட்கப்படுகிறார்.

‘‘காமராஜ், வசந்தராஜ், நந்தினி என்று மூன்று வாரிசுகள். காமராஜ் மட்டும் கம்பெனியில் வேலைக்குப் போகிறான். மற்ற இருவரும் படிக்கிறார்கள். எனக்குத்தான் படிப்பு வரலை. என் குழந்தைகளாவது நல்லா படிக்கணும் என்பதுதான் என் ஆசை.

லோக்கல் லைட் மியூசிக்கில் பாடிக்கிட்டிருக்கேன். இதுதவிர, கருணாஸ் அடிக்கடி வாய்ப்பு கொடுப்பார். டி.எம்.எஸ். வாய்ஸில் நான் பிரமாதமாகப் பாடுவேன். கவிஞர் கபிலன்தான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றினார். ‘மச்சி’ படத்தில் பாட அவர்தான் எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதில் ‘கும்மாங்கோ கும்மாங்கோ...’ என்ற பாட்டைப் பாடினேன். பாடல் பிரபலமாயிற்றே தவிர, அந்தப் படம் ஓடவில்லை. கபிலன் மீண்டும் மிஷ்கினிடம் அறிமுகப்படுத்தினார்.

‘சித்திரம் பேசுதடி’ படத்தில் வரும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ என்ற பாட்டை அவரிடம் பாடிக்காட்டினேன். ‘பாட்டின் வரிகள், டியூன் எல்லாமே நன்றாக இருக்கிறது... இதையே ரெக்கார்டிங் பண்ணிடுவோம்’னு சொன்னார். நான் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பாடும் ஸ்டைலைப் பார்த்து விட்டு, ‘பேசாமே நீங்களே இந்தப் பாட்டைப் பாடி நடிச்சிடுங்களேன்’ என்றார். படம் வெளி வந்தது. நான் எதிர்பார்த்த அளவிற்கும் மேல் அந்தப் பாடலும் பிரபலமானது. நானும் பிரபலமாகிட்டேன். ரோட்டில் போக முடியவில்லை. என்னைப் பார்த்தவுடன் ‘நீங்க உலகநாதன் தானே அந்த ‘வாள மீனுக்கும்...’ பாட்டை பாடுங்க’ன்னு கேட்கிறாங்க. இதனால் இரண்டொரு முறை டிராஃபிக் ஜாம்கூட ஆகிட்டது. அந்தப் பாட்டில் முத்துராஜ் என்ற பையன்தான் எனக்கு மைக் பிடிப்பான். இந்தப் பாட்டின் மூலம் அவனும் பிரபலமாகிவிட்டான்.

டூவீலரில் போகும்போது, ஹெல்மெட் போட்டுக்கிட்டுதான் போறேன். இதனால் ஏதோ என் சுதந்திரமே பறிபோய்விட்டது போன்ற உணர்வு. ஆனா, இதுகூட சந்தோஷமாதான் இருக்கு...’’ என்று கூறிச் சிரிக்கிறார் உலகநாதன்.

பேட்டி : சந்துரு
படங்கள் : சித்ராமணி

நன்றி : குமுதம்29-03-2006 இதழ்
type="text/javascript">&cmt=3&postid=114404956701518769&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, April 01, 2006

வாடகைத்தாய் - இந்தியாவிலும்

பரதேசி கடிதம்!


கும்புடுறேன் சாமியோவ்!

இன்னா சாமி எப்படி கீரிங்க?
நேத்துதான் நம்ம துளிக்காணம் பொண்சாதி பரிமளாவை பார்த்துட்டு வந்தேன்... முன்னைக்கு இப்ப நல்லா வெடவெடன்னு வளர்ந்து, பூசி மொழிகனா மாதிரி குஜாலா இருந்தாள். இன்னா தங்கச்சி இன்னா மேட்டரு ஆளு படா சோக்கா மாறிக்கினியேன்னு கேட்டேன்.

"நம்ம சுப்பம்மா தான் என் கண்ணை தொறந்தா புண்ணியவதி. அதனால என் கஸ்டமெல்லாம் தீர்ந்து நல்லது நடக்கப் போகுதுன்னு சொன்னாள்.

அது இன்னா பரிமளம் தங்கச்சி. சுப்பம்மா எப்படி உன் கண்ணை துறந்துச்சின்னது கேட்டேன்.

"அதான் அண்ணாத்த வெளிநாட்டுக்காரங்களுக்கு புள்ள பெத்து குடுத்தா மூணுலட்சம், அஞ்சு லட்சம்னு பணத்தை அள்ளி அள்ளிக்" குடுக்கறாங்கன்னு சொல்லுச்சு.

"இது இன்னா தங்கச்சி புதுமேட்டரா கீது"ன்னு கேட்டேன். "ஆமாம் அண்ணாத்த இது வாடகை தாய்ன்னு ஒரு மேட்டரு. வெளிநாட்டுல கீர பணக்காரங்களுக்கு புள்ளக்குட்டி இல்லேன்னா அவங்க நம்ம நாட்டுக்கு வந்து... அவங்களோட கருமுட்டையை எடுத்து இங்க இருக்கற வாடகைத்தாயோட வயித்துல வச்சி வளர வைக்கிறாங்க. பத்து மாசத்துல குழந்தைய பெத்து குடுத்ததும் அவங்க கிட்டே நாம பேரம் பேசினா மாதிரி மூணு லட்சத்திலிருந்து அஞ்சு லட்சம் வரைக்கும் பணத்தை குடுத்துட்டு அந்த குழந்தையை எடுத்துக்கினு போய்டுவாங்க.

"அடிப்பாவி... இந்த மேட்டரு எப்படி நம்ம ஊருவரைக்கும் வந்துச்சு?"

"அது. குஜராத்துக்கு காண்ட்ராக்ட் வேலைக்க போயிருந்தப்ப நம்ம சுப்பம்மா அங்க நயினாபட்டேல்னு ஒரு டாக்டரை பார்த்திருக்காள். அந்த டாக்டரு தான் இந்த மேட்டரை சொன்னாராம். அங்க ஜாசமதின்னு ஐம்பது வயசு. பொம்பளை இந்த மாதிரி காசுக்கு ஆசைப்பட்டு குழந்தை பெத்து குடுத்துதாம். அதை பார்த்துட்டு அந்த பொம்பளையோட மூணு பொண்ணுங்களும் நீ. நான்னு போட்டிப்போட்டுகினு இப்ப வாடகைக் குழந்தையை சுமந்துகினு கீதுங்களாம்.

நம்ம சுப்பம்மா சும்மா நாட்டு கட்டை மாதிரி 'கிண்'ணுன்னு இரு;ககிறதை பார்த்துட்டு அந்த டாக்டரு உனுக்கு மூணு லட்சம் வாங்கித்தர்றேன் நீ குழந்தையை பெத்து தர்ரியான்னு கேட்டிருக்காரு. சுப்பம்மாவோட புருஷனுக்குத் தான் துட்டு குடுத்துட்டாப் போதுமே. அந்தாளும் சம்மதிச்சிட்டான். சுப்பம்மாவும் மூணு லட்சம் சம்பாதிச்சிகினு ஊருக்கு வந்து ஊடு, வாசல் கட்டிகினு மிச்சத்தை வட்டிக்கு விட்டுக்கினு கீது... அது சொல்லித்தான் நானும் குஜராத்துக்கு போவப்போறேன்."

பரிமளா சொன்னதைக் கேட்டு கோவாலு கோபமாக ஏங்கிட்டே கேட்டான். "தூத்தேரி இது என்னடா நாதாரிப் பொழப்பு. எவனோ துட்டு குடுக்கிறான்னு எவன் குழந்தையோ பெத்துக் கொடுக்க போறான்னு சொல்லுதே அந்த பொண்ணு. இதல்லாம் உருப்படுமா?"

கோவாலு சத்தமாக சொல்ல அதைக் கேட்ட டாக்டர் தணிகாசம் காரைவிட்டு கீழே இறங்கி வந்தார். "என்னப்பா தம்பி கோபாலு ஏன் கோபப்படற. நீ நினைக்கிற மாதிரி இது ஒண்ணும் மகாக் கேவலமான செயல் ஒண்ணுமில்ல. இது மனிதநேய அடிப்படையிலே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அவங்களோட கருமுட்டையை சுமந்து அவங்க குழந்தையை பத்து மாசம் தன்னோட வயித்திலே வளர்த்துக்கொடுக்கிற ஒரு தியாகமான செயல்.

இதிலே கருவை சுமக்கப் போற அந்த பொண்ணோட முழுச் சம்மதமும், உடல் ரீதியாக அவள் ஆரோக்யமானவளாகவும். அவள் குடும்பத்தாருடைய சம்மதமும் இருந்தால் போதும் இது தப்பு இல்லே. ஆனால் பணத்துக்காக இப்படி ஒரு செயலில் ஈடுபடுவது தான் தவறு. ஆனால் இதற்கான சரியான தடுப்பு முறைகள் இல்லை. இப்போது தான் இந்த வாடகைத் தாய் விஷயத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் புதிய சட்டமுறைகளை உருவாக்கியிருக்கு.

வாடகைக்கு கருவை சுமக்கிற பெண்கள் குஜராத்தில் அதிகப்படியான பணம் கேட்டு, குழந்தையின் கருவிற்கு சொந்தமானவர்களிடம் நச்சரிப்பதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதனால நம்ம ஊருக்கு இது வந்திடாது கோவாறு நீ கவலைப்படாதே...

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...? அமெரிக்காவில புதுசா கல்யாணமான ஒரு பெண்ணுக்கு கருப்பையில பிரச்சனைன்னு அவளோட கருமுட்டையையும் அவள் கணவரோட கருமுட்டையையும் எடுத்து, அந்த புதுப்பெண்ணின் அம்மாவே தன்னோட வயிற்றில் வச்சி வளர்த்து, குழந்தையை பெத்தெடுத்து அதைத்தன் மகள் கிட்டேயே கொடுத்தாங்க.

இப்ப அந்த குழந்தைக்கு மூணு வயசு ஆகுது. அது தன்னை பெத்த தாயை அம்மான்னு கூப்பிடுமா? பாட்டின்னு கூப்பிடுமா?"

அதானே...? இது கின்னடா பேஜாரான மேட்டரா கீதுன்னு நான் ஓசனப் பண்றதுக்கள்ள தணிகாசலம் டாக்டரு கார்ல கிளம்பிக்கினாரு.

கின்னா சாமி. நானும் கிளம்பிக்கிறேன். அடுத்த வாரம் உங்களை பார்க்கறேன் வரட்டும்ங்களா...

நன்றி :குமுதம் ஸ்பெஷல் -பரதேசி கடிதம்
type="text/javascript">&cmt=4&postid=114404870299197802&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது