இந்தியாவிலும் ஓரு உலக சாதனை நாயகன்
ஏழு மணி நேரத்தில் 65 கி.மீ., துõரம் ஓடி லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றான் சிறுவன்
புவனேஸ்வர்: ஒரிசாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் புதியா சிங், 65 கி.மீ., துõரம் மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைத்தான். சிறுவனின் சாதனை, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.
ஒரிசாவை சேர்ந்த புதியா சிங் பிறந்து நான்கு ஆண்டுகள் எட்டு மாதம் தான் ஆகிறது. இந்த வயதில் அத்தனை எளிதில் பிறர் யாரும் செய்யாத சாதனையை செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திருப்பியுள்ளான் இந்த சாதனைச் சிறுவன். மாரத்தான் போட்டியில் ஓடி சாதனை படைக்க வேண்டும் என்பது சிறுவனின் நீண்ட நாள் ஆசை. இந்த ஆசையை செயல்படுத்த நேற்று புதியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரிசாவின் புனித நகரான பூரியில் உள்ள புகழ் பெற்ற ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்திய பின் நேற்று காலை தனது சாதனை ஓட்டத்தை துவங்கினான். சிறுவனின் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ், மத்திய ரிசர்வ் போலீசார் 10 பேர் உடன் ஓடி வந்தனர். ஓட்டப் பந்தய வழி முழுவதும் சாலையில் ஓரங்களில் திரண்டிருந்த மக்கள் புதியாவை கைதட்டி உற்சாகப்படுத்தி, தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். ஏழு மணி இரண்டு நிமிடங்களில் 65 கி.மீ., துõரத்தை கடந்து புவனேஸ்வர் நகருக்குள் நுழைந்த புதியா தனது ஓட்டத்தை நிறைவு செய்தான். பின்னர் சாதனைச் சிறுவனை கவுரவிக்கும் வகையில் புவனேஸ்வரில் பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவில், லிம்கா சாதனைப் புத்தகத்தின் உதவி ஆசிரியர் அம்ரீன் துõர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது," பூரியிலிருந்து புவனேஸ்வர் வரை புதியாவின் ஓட்டத்தை கவனமாக கண்காணித்தோம். இத்தனை சிறிய வயதில் வேறு யாரும் இது போன்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க முடியாது. இது மிகச் சிறந்த சாதனை மட்டுமல்ல அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு விஷயம். புதியாவின் பிறந்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில் அவன் செய்த சாதனைகள் வரை அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படும். சிறுவனின் சாதனை மற்றவர்களுக்கு முன் உதாரணமாக விளங்கும். புதியாவின் சாதனை குறித்த விவரங்கள் லிம்கா ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் 2007ம் ஆண்டிற்கான லிம்கா புத்தகத்தில் சிறுவனின் சாதனை இடம் பெறும்,' என்றார்.
பாராட்டு விழாவில் ஒரிசா விளையாட்டு துறை அமைச்சர் டெபாசிஸ் நாயக், காங்கிரஸ் கட்சி எம்.பி., அர்ச்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதியாவின் தாயார் சுகந்தி சிங் தனது மகனின் சாதனை குறித்து," புதியாவால் ஒரிசாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை கிடைத்துள்ளது. எனது மகனின் சாதனையால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்,' என பெருமிதத்துடன் கூறினார்.
நன்றி : தினமலர் - 03-05-06 type="text/javascript">&cmt=7&postid=114668133604648383&blogurl=http://srishiv.blogspot.com/">