காதல் வலை - பகுதி 15
முன் கதை சுருக்கம் .....:)
ஆட்டோ பிடித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த அபு பேலஸ் நட்சத்திர உணவகத்திற்கு விடச்சொன்னேன். முதன்முறையாக நட்சத்திர விடுதியில் சாப்பிடுகின்றாள் என் தேவதை, எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன, போய் அமர்ந்து, வழக்கம் போல இரண்டு தட்டு தயிர் சாதம் ஆர்டர் செய்துவிட்டு, அரை இருளில் அமர்ந்திருந்தோம், நாங்கள் இருவர் மட்டுமே, மீண்டும் ஒருமுறை அந்த மாயாஜாலப்பை திறந்துகொள்ள, இந்த முறை அழகான ஒரு சிறிய கிஃப்ட் பேக், என் கையைப்பிடித்து அழுத்தி வைத்தவள், திறந்துபார்க்கச்சொன்னாள்.
மெதுவாகத்திறந்தவன் அப்படியே மலைத்துப்போனேன், உள்ளிருந்து பீத்தோவானின் 5 ஆம் சிம்பொனி இசையுடன் இரண்டு சிறிய குழந்தைகள் பொம்மைகள், மஞ்சள் ஒன்று பச்சை ஒன்று , சுற்றி சுற்றி வந்து முத்தமிட்டன....அப்படியே மனம் குளிர்ந்து அவள் கைப்பிடித்து முத்தமிட்டேன்...கூச்சத்துடன் கையை விலக்கிக்கொண்டாள் என் தேவதை.....
காதல் வலை - பகுதி 15
ஹ்ம்ம்ம்ம்...என்னவோ இன்றுதான் போல் தோன்றுகின்றது, 3 வருடங்கள் ஓடிவிட்டன, தொடர்கின்றேன், கரங்களை விடுவித்துக்கொண்ட என் தேவதை, வந்திருந்த உணவினைக்காண, தயிர் சாதத்துடன் முள் கரண்டி இரண்டு இணையும், சாதாரண கரண்டி இரண்டு இணையும் வைத்திருந்தது. வட இந்திய பழக்கம் கொடுத்த தைரியத்தில் கரண்டியை கையில் எடுத்து உண்ண ஆரம்பிக்க, நெளிந்தாள் என் தேவதை. புரிந்தது, பக்குவமாக அந்த கரண்டியை எடுத்து அவள் கையில் கொடுத்து எப்படி பிடிக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க, "வேண்டாமே ஈஷ், ஒரு மாதிரியா இருக்கு, இன்னொருவாட்டி வேணும்னா சாப்பிடறேனே?" என்றவளை வர்புறுத்த மனம் இன்றி, "சரி" என்று கூறியவாறே, என் கையில் இருந்த கரண்டியையும் ஓரமாக வைத்து விட்டு, எழுந்து சென்று கை அலம்பி வந்தவன், நானும் கைகளால் தயிர் சாதத்தினை எடுத்து உண்ண ஆரம்பித்தேன்.
அவளுக்கும் மிகவும் வசதியாகவும், பிடித்திருக்கவும், சிறிது தயிர் சாதம் மட்டும் உண்டாள் என் தேவதை, பக்க உணவாக என்ன வேண்டுமென்று கேட்க, "ஒன்னும் வேண்டாம்டா" என்று சொன்னவளை புன்முறுவலுடன் பார்த்து, காத்திருப்போனை (அதுதாங்க வெயிட்டர் :) ) அழைத்து , மாங்காய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் கொண்டுவரச்சொன்னேன். எடுத்து வந்தவர் என்னை ஒரு மாதிரியாகப்பார்க்க, அழகான ஆங்கிலத்தில் அவரிடம் உரையாடி நானும் சற்று நாகரீகமானவன் தான் ( அவங்க பாஷைல அப்படி பேசினாதான் நம்புறாங்கோ :( ) என்று காட்டி பின் அழகுத்தமிழில் நானும் அவர்களின் ஊர்தான் என்பதை விளக்க, அவர்களுக்கு சந்தோஷம் பிய்த்துக்கொண்டு போனது, " இங்க வந்தவங்கள்ள, இந்த முழு வாரத்தில் நீங்க மட்டும் தான் சார் தமிழ்ல பேசி இருக்கீங்க" என்று சொன்னவரை தோழமையுடன் பார்த்து ஒரு புன்முறுவலை கொடுத்துவிட்டு, " வேற என்ன வேணும்டா?" என்று கேட்க, பனிக்கூழ் வேண்டுமென பணித்தாள் என் தேவதை ( அதுதாங்க ஐஸ் கிரீம் :) ), சரி என்றவன் காத்திருந்தவரை பனிக்கூழ் வகைகளை வரிசைப்படுத்தச்சொல்ல, "மன்னிக்கவும் ஐயா எங்கள் உணவகத்தில் பனிக்கூழ் இல்லை" என்று உரைத்தவரிடம் 15 ரூபாய்களை உணவுத்தொகைக்கு மேல் இனாமாகக்கொடுத்துவிட்டு வெளியில் வந்தவன், அருகில் ஏதேனும் பனிக்கூழ் கடைகள் இருக்கின்றனவா என்று தேட, அநியாயம் :(, அந்த பகுதியில் பனிக்கூழ் கடை இருப்பதற்கான அறிகுறியே தென்படாததால், வெளியே வந்து ஒரு மூன்று சக்கர இயந்திர உருளியை பிடித்து ( ஆட்டோ) எங்கே செல்லலாம் என்று கேட்க, "வள்ளுவர் கோட்டம் அல்லது அதன் அருகிலிருந்த நடேசன் பூங்கா" என்று பணித்தவளின் வார்த்தையை தட்டாது ஓட்டுனரிடம் கேட்க 50 ரூபாய் கேட்டவரிடம் , கண்மணி பேரம் பேசி 35 ரூபாய்களுக்கு ஒத்துக்கொள்ளவைத்து என்னை ஒரு வெற்றிப்பார்வை பார்க்க, என் தோல்வியை ஒத்துக்கொண்டு உடன் ஏறி அமர்ந்தேன்.
என்னவோ தேவலோகத்து தேரில் தேவதை ஒருத்தியுடன் பவனி வருவது போல் ஒரு உணர்வு :), பாதி வழியில் திடீரென்று ஒரு பாலம் கடக்கும் முன் கீழே ஏதோ ஒரு பழங்காலத்து கட்டடம் தெரிய, அது என்னவென்று கேட்டேன், ஏதோ அருங்காட்சியகம் என்று அவள் கூற, அதன் அருமை பெருமைகளள நான் அவளுக்கு விளக்க, அது இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் அது நம் பாரத ஜனாதிபதியால் 100ஓ 150ஆம் ஆண்டோ கொண்டாடி திறந்து வைக்கப்பட்ட தகவலை தேவதை தெரிவிக்க, "அங்கேயே போவலாமே?" என்று அழைத்தவனிடம், "சரி" என்று கூறியவள், வண்டியை அங்கே திருப்பச்சொன்னவள், பேசிய காசினை நான் கொடுக்கப்போக, " ஏன் இப்படி லூசா இருக்கே?" என்றவாறே , அவரிடம் மீண்டும் பேரம் பேசி 20 ரூபாய்களை மட்டும் கொடுத்துவிட்டு உள்ளே நுழைய வேண்டிய நுழைவுவாயில் சீட்டினை கட்டணம் கட்டி பெற்றுக்கொண்டு எனை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
நுழைந்ததும் இடது புறம் இருந்த பாதையில் நடந்து, அருகில் இருந்த பழைய நூலகத்திற்கும், முதன்மை கட்டிடத்திற்கும் இடைப்பட்ட படிக்கட்டுகளில் அமர்ந்தோம் ,
முதன்முறையாக அருகே என் தேவதையுடன் அமர்கின்றேன் அவளின் காதலனாக. இருந்த
இடம் என்னவோ செத்த கல்லூரி என்று மாணவர்கள் செல்லமாக அழைத்தாலும், அருங்காட்சியகம் கூட ஒரு அற்புதமான தேவலோகமாகத்தெரிந்ததே? இதுதான் காதலின் அற்புதமோ? அந்த சமயம் பார்த்துத்தானா அந்த தொலைபேசி அழைப்பு வந்து தொலைக்கவேண்டும்?????
தொடர்வேன்...அடுத்த பகுதியில் :)
வணக்கமுடன்,
உங்கள் ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=0&postid=115774981414695681&blogurl=http://srishiv.blogspot.com/">