காதல் வலை - பகுதி 8
மாது சொன்னது,
"கவலப்படாத ஈஸ்வர், அவங்க இப்போ குழப்பத்துல இருக்காங்க, நான் பேசி அவங்ககிட்ட சம்மதம் வாங்கறேன், அவங்க சம்மதிப்பாங்க"அடுத்த சில மாதங்கள், மாது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஒன்று எனக்குப்பைத்தியம் பிடித்திருக்கும், இல்லையேல் அன்றே சுய கழிவிரக்கத்தில் தற்கொலையில் முடிந்திருக்கும் என் வாழ்வு. தினமும் என்னிடம் குறைந்தபட்சம் ஒரு 30 நிமிடங்களாவது அரட்டை (ச்சேட்) அடிப்பாள், சிறிது சிறிதாக மனதும் தேறிவந்தேன். ஆயினும் அந்த நினைவுகள் என்னை மிகவும் வதைத்ததென்னவோ மறுக்கமுடியாத உண்மை. அந்த சமயம் தான் அழகி திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. எப்படி இந்த விசயம் என் வீட்டில் தெரிந்ததென்று எனக்குத்தெரியாது, ஆனால் சரியாக என் தம்பி அந்த படத்தின் ஒளித்தகட்டை வாங்கி எனக்கு அனுப்பி வைத்தான். பார்த்ததும் ரொம்ப அழுகையாக வந்தது, மீண்டும் விடுதியில் அமர்ந்து மனம் குமுறி அழுதேன். அந்த சமயங்களில் எனக்கு ஆறுதலாக இருந்தவள் மாதுதான்,வாரம் ஒருமுறை அவளுக்கு தொலைபேசியில் அழைத்துப்பேசுவேன், வெள்ளி இரவுகள் 9.30 முதல் 10.30 வரை அவளின் விடுதி தொலைபேசி எனக்காக ஒதுக்கப்பட்டது, செல் தொலைபேசி எல்லாம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத காலம் அது. எவ்வளவோ ஆறுதல்கள் கூறி இருக்கின்றாள் எனக்கு மாது. வாழ்வில் மீண்டும் ஒரு பிடிப்பு வந்ததென்றால் சந்தேகமே இல்லாமல் அந்த நன்றிகள் மாதுவையே சாரும்.
இடையில் மின்னஞ்சல்கள் அரட்டைகளில் நண்பர்கள் பலர் கிட்டினும், என் மனதில் அமர்ந்தவர்கள் சிலரே, தாரா, திசோ, வில்லிஜாய்ஸ்(அமெரிக்கா), மஹா, துர்கா, இப்ராகிம், இப்படி பலர் புதிதாக என் நட்பு வளையத்தில் நுழைந்தாலும், அவர்களுள் என்றும் முதலிடத்தில் இருந்தவள் மாது மட்டுமே. சென்றன ஆறுமாதங்கள், அடுத்த மே மாதமும் வந்தது. சென்றேன் தமிழகத்திற்கு மீண்டும், இந்த முறை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன், ஆனாலும் அந்த முறை ஏனோ மாதுவை நேரில் சந்திக்கவேண்டும் போல் இருந்தது. அவளை சந்திக்க வீட்டிலிருந்து கிளம்பி பாண்டிச்சேரி சென்றடைந்தேன். அது ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதின் துவக்கம், 10.30 மணி இருக்கலாம், நேராக அவள் விடுதிக்குச்சென்றேன், சிறிதே சிரமப்பட்டாலும் தொலைபேசியில் அழைத்து அவளின் இருப்பை சரி பார்த்துக்கொண்டு நேரே சென்றேன், மாடியில் அவள் ஜாகை இருந்ததால் கீழே இருந்து அழைப்பு விடுத்தனர், ஒரு குட்டிதேவதை மிதந்து வருவதுபோல் இறங்கி ஓடி வந்தாள் மாது. இரவு உடையில் இருந்தவள், என்னைக்கண்டதும் ஒன்றும் புரியாமல் உடனே வந்த வழியே மேலே ஏறி ஓடினாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை சற்று நேரம், ஏற்கனவே தொலைபேசியிலும் மின்னரட்டையிலும் மணிக்கணக்கில் அவளிடம் பேசி இருந்தாலும் முதன்முறை நேரில் பார்த்தபோது சிறிது பதட்டம் இருந்தது, ஒரு பெண்ணை முதன்முறை வெளியில் சந்திக்கின்றேன் என் வாழ்நாளிலேயே. பதட்டத்துடன் சில நிமிடம் காத்திருந்து பார்த்துவிட்டு அவள் வரவில்லை என்றால் வீடு திரும்பிவிடலாம் என்று எண்ணி ஒரு 5 நிமிடம் காத்திருந்தேன்.
உடை மாற்றிக்கொண்டு, அழகிய வான்நீல சுடிதாரில் ஒரு வானிலிருந்து வந்த தேவதை போலவே இறங்கி வந்தாள் மாது. இறங்கி வந்தவள், ஈஸ்வர்? போலாமா? என்று கேட்க, என்னவோ ரொம்ப வருசம் ஒன்னா படிச்சி ஒரே வீட்டில் ஓடிப்பிடிச்சி விளையாடியமாதிரி சாதாரணமா அவளோட கைல இருந்த பையை வாங்கிக்கிட்டு, நான்வாங்கி வந்திருந்த பழங்களைக்கொடுத்தேன், அதற்கு , அதெல்லாம் போற வழில கொடுன்னு சொல்லிட்டு நடந்தாள். பின் சென்றேன்,என்னவோ ரொம்ப பழகிய ஒரு பெண்ணுடன் ( என்னதான் நேரில் பார்த்ததே இல்லை என்றாலும்) செல்லும் ஒரு உணர்வு. ஒரு ஆட்டோ பிடித்து ஹோட்டல் பரமகுரு என்று நினைக்கின்றேன், ஆனந்த் திருமண மண்டபத்திற்கு அருகில் உள்ளது, அங்கே சென்று முதலில் மதிய உணவு உண்டு பின் வேறு எங்கேனும் செல்லலாம் என்று அவள் சொல்ல, பாண்டிச்சேரி அதிகம் அறியாத நான் அவளுடனே சென்றேன். "என்ன சாப்பிடலாம் ஈஸ்?" , "நீயே சொல்லு மாது, எனக்குஎதுவாயிருந்தாலும் பரவாயில்ல, சைவமாக இருந்தால் நல்லது", இரண்டு முழு உணவிற்கும் இரண்டு தயிர் சாதத்திற்கும் சொல்லிவிட்டு பேசத்தொடங்கினோம். உணவும் வந்தது, சாப்பிட்டு முடித்து, வேறு எங்கு செல்லலாம் என நான் கேட்க, நுணாகுப்பம் செல்லலாம் என்று அவர் கூற, சரி என்றபடி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு நகரப்பேருந்தைப்பிடித்து நுணாகுப்பம் படகுக்குழாமிற்குச்சென்றோம், அங்கிருந்த ஒரு பூங்காவில் புல்வெளியில் அமர்ந்து பேசத்தொடங்கினோம்.
"தனம் மறுபடியும் பேசினாங்களா ஈஸ்?" என்றென்னை அவள் கேட்க, இல்லை என்ற பதில் கேட்டு அவள் முகமும் வாடியது, சிறிது நேரம் ஏதும் பேசவில்லை, நிறைய ஆறுதல் சொன்னாள், பின்னர் மாலை ஒரு 4.30மணிக்கு மீண்டும் கிளம்பி பாண்டிக்கு வந்து அவளை அவளின் விடுதியில் விட்டுவிட்டு பேருந்து பிடித்து என் வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் கிளம்பி தலைநகர் வந்து சேர்ந்தேன்...மனதில் ஒரு புத்துணர்ச்சி, அந்த வெற்றிடத்தினை சிறிது நிரப்பியே இருந்தாள் மாது. வழக்கம் போல் தொலைபேசியிலும் மின்னரட்டையிலும் எங்கள் நட்பு தொடர, அவளின் ஒன்றுவிட்ட சகோதரியையும் அரட்டையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். திடீரென்று ஒரு நாள் கேட்டேன் எங்கள் அரட்டையில் அவளிடம் , "மாது, நீ யாரையாச்சும் காதலிச்சிருக்கியா?" "காதலிச்சிருக்கேன் ஈஸ்வர்", அவளின் பதில் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, "யார் அது மாது? என் கிட்ட சொல்லலாமா? "
தொடர்வேன்.... type="text/javascript">&cmt=3&postid=113459024027973988&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
என்ன பல்லவி? கதை ஓட்டத்தில் கதையின் முதல் பகுதியையே மறந்துவிட்டீர்களா? ஹாய் தேர்....ஆரம்பம் மறந்துவிட்டதா? மாதுவை ஈஸ்வர் முதன்முதல் சந்தித்தது இணையத்தில்தான், அதன்பின் தான் அவளை நேரில் சந்தித்தது, அதையும் பகுதி 7ல் எழுதி இருக்கின்றேனே? 7 அல்லது 8ல் என்று நினைக்கின்றேன்....:)
அன்புடன்
ஸ்ரீஷிவ்...
Friday, December 16, 2005 9:16:00 PM
கதையின் நடை நேர்த்தியாக, எளிமையாக , அருமையாக உள்ளது,
மாதுவின் பதிலை அறிய ஆவலுடன் , அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!
Friday, December 14, 2007 11:18:00 AM
என்ன திவ்யா? மீதி பகுதிகளும் நான் எழுதிவிட்டேனே? படிக்கவில்லையா? மற்ற மாதங்களில் படியுங்கள், அநேகமாக முடித்துவிட்டேன் என்றே நினைக்கின்றேன், இன்னும் கடைசி பகுதி மட்டுமே மீதம், இன்னும் இரண்டு வாரங்களில் முடித்துவிடுவேன் அதையும்...
ஸ்ரீஷிவ்...
Friday, December 14, 2007 9:29:00 PM
Post a Comment
<< Home