என் இனிய அஸ்ஸாம்....பகுதி 3.
காமாக்கியா தேவி கோவில், இது ஒரு அருமையான அற்புதமான கோவில், அமைதியாக இருக்கும். இந்த கோவிலுக்கான சரித்திர இதிகாசக்கதை இது தான், பார்வதி தேவி, தட்சனுக்கு மகளாகப்பிறந்திருந்த சமையம், சிவனை அவர் மணம் புரிந்து சிவபுரி சென்றதும் தட்சன் தன் இல்லத்தில் ஒரு யாகம் நடத்தினார். அதில் சிவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை (அவிர்பாகம்) கொடுக்காமல் தட்சன் யாகத்தை நடத்திட அதனை நிறுத்தி தன் கணவனுக்கான மரியாதையை பெற்றுவர கணவர் தடுத்தும் கேட்காமல் செல்லும் பார்வதி தேவி, அவமானமடைந்து, வேறு வழி தெரியாமல் அவன் மூட்டி இருந்த யாக நெருப்பினிலே குதித்து தற்கொலை செய்து யாகத்தை நிறுத்த, கோபமுற்ற சிவன் வந்து தட்சனைக்கொன்று யாகத்தைச்சிதைத்து தேவியின் ஸ்தூல உடலைத்தூக்கித்தோளில் போட்டுக்கொண்டு உலகமெங்கும் சுற்றிவர அவரது பாரம் தாங்காமல் பூமி மாதா கதற, விஷ்ணு தன் சக்கரத்தை அனுப்பி சிவனின் தோளில் இருந்த தேவியின் உடலை 108 துண்டுகளாக துண்டித்துப்போட்டு சிவனை சாந்தப்படுத்துமாறு அனுப்ப, அப்படி துண்டுகளாக விழுந்த அம்மனின் அங்கங்களே உலகில சக்திபீடங்களாயின.
அதில் அம்மனின் பிறப்புறுப்பு விழுந்த இடம் இந்த காமாக்கியா தலமாகியது, அதனால்தான் இந்த மாவட்டத்தின் பெயர் கூட, காமரூபம் (Kamrup District). அழகிய நிலாச்சல் மலைத்தொடரின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த கோவில் மிக சக்தி வாய்ந்தது. இங்கு அன்னைக்கு தனியாக பிரதிமை கிடையாது, உருவமோ சிற்பமோ இல்லை வழிபட, ஒரு சுற்று சுற்றி வந்து பின் உள்ளே இறங்கிப்பார்ப்போமாயின், சிறிது பள்ளத்தில் அன்னையின் பாதத்தில் ஒரு தெள்ளிய நீரூற்று இருக்கும், அந்த தண்ணீர் பிரசாதமாகத்தரப்படுகிறது அங்கு இருக்கும் பாண்டாக்களால், பாண்டாக்கள் என்றதும் நினைவிற்கு வருகிறது, நிறையபேர் இங்கு, பாண்டாக்கள் என்ற பெயரில் ( பாண்டாக்கள் என்றால் பண்டிதர்களாம்) பணம் பிடுங்குவார்கள். யாரிடமும் நாம் செல்லத்தேவை இல்லை, அப்படி கடவுளுக்கு பணம் போட வேண்டும் என்று தோன்றினால் , உள்ளே கருவறையில் அன்னையின் மீது ஒரு காணிக்கை போட்டால் போதும்.
ஹ்ம்ம்ம்....தீபாவளிக்கதைக்கு வருவோம், நரகாசுரனின் தாயார் இந்த காமாக்கியா தேவி, இறைவனிடம் சண்டையிட்டு தன் அன்னையின் கையினால் கொல்லப்படுமுன் என் மறைவுநாளை மக்கள் சந்தோஷமாகக்கொண்டாடட்டும் என்று சொல்லி மறைந்தாலும், தாய் அல்லவா? எனவே, தீபாவளியின் போது இங்கு வீடுகளில் ஒரு தீபம் மட்டும் வைத்து துக்கமிருப்பர். நான் சொல்வது, உண்மையான அஸ்ஸாமியர் இல்லங்களில், இங்கு குடி பெயர்ந்த , பெயர்ந்துகொண்டிருக்கின்ற வங்க தேசத்தினர், பீகார் மானிலத்தினர் போன்றோரைக்கேட்டால் தெரிய வாய்ப்புகள் குறைவே. இந்தக்கோவிலுக்கு வரும் நிறைய பேர், இந்த காமாக்கியா தேவி கோவிலுடன் திரும்பிச்சென்று விடுவார்கள், அப்படி செய்யும்கால் அவர்கள் ஒரு அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை ஒரு ஒரு மைல் தொலைவினில் தவற விடுகிறார்கள் என்றே சொல்வேன், அது .....புவனேஷ்வரி மந்திர்.
புவனேஷ்வரி தாயாரின் கோவில், காமாக்கியா கோவீலிலிருந்து மேல்ல் நோக்கிச் செல்லும் பாதையில் உச்சியில் இருக்கிறது, அங்கு ஒரு கம்பி இல்லா தந்தி நிலையமும் இருக்கிறது, அமைதியான இடம், அமர்ந்து ரசிக்கக்கூடிய இடம். ஒருபுறம் பார்க்க, அழகான பிரம்ம புத்திரா நதி ஒரு ஓவியம் போல ஓடும் காட்சி, மற்றொருபுறம் நிலாச்சல் மலைத்தொடரின் தொடர்ச்சி, ஒருபுறம் இந்தியத்தொழில்நுட்ப்பப்பயிலகம், ஒரு புறம் சராய்காட் பாலம், இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்...மேலும் காதலர்கள் மற்றும் இளம் தம்பதியர்களுக்கு ஒரு அருமையான அமர்ந்து பேசுமிடமாகவும் அருகில் சிறு பூங்காக்கள் அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள்...அவசியம் பார்க்கவேண்டிய ஒரு இடம், மற்ற இடங்கள் போல அது அசிங்கமாக நடந்து கொள்ளும் இடமெல்லாம் இல்லை, கடவுளின் உறைவிடமே.....எனவே தைரியமாகச்சென்று வரலாம். சரி அங்கிருந்து இறங்கி வருவோமா? வந்து அங்கிருந்து சற்று முன் செல்ல, பூதநாதர் ஆலயம் எனும் எரிகாடு, அதனைத்தாண்டிச்செல்ல, பராலுமுக் (Bharalumukh) எனும் முனை, பிரம்மபுத்திரா நதி , சாலையை ஒட்டியே ஓடும் அற்புதக்காட்சி காணக்கண்கோடி வேண்டுமே....ச்ங்கர்தேவ் பார்க், கரையில் அமர்ந்து பிரம்ம புத்திராவைப்பார்க்க ரசிக்க, கடந்துவருமின் ஜேபி'ஸ் ரெஸ்டாரெண்ட், நம்ம ஊர் மசால் தோசை, இட்லி, கடலை , காரச்சட்டினி அற்புதமாக இருக்கும்....
இது பற்றி நாளை பார்ப்போமா???
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்... type="text/javascript">&cmt=2&postid=112299795017133898&blogurl=http://srishiv.blogspot.com/">
2 Comments:
அன்புள்ள சிவா,
'சூப்பர்'
அருமையா எழுதியிருக்கீங்க.
என்றும் அன்புடன்,
துளசி.
Tuesday, August 02, 2005 4:45:00 PM
நன்றிகள் அம்மா
தங்கள் ஊக்கங்கள் என்னை உழைக்க வைக்கின்றன...இன்னும் எழுதுவேன், இது குவஹாத்தி பற்றிய தகவல்கள் மற்றுமே, இன்னும் கோல்பரா மாவட்டம், தின்சுக்கியா மாவட்டம், டிப்ருகார் மாவட்டம் போன்ற மாவட்டங்களின் தகவல்களையும் அளிக்க உள்ளேன், சென்றவாரம் இதற்காகவே ஒரு சுற்றுப்பயணம் போய் வந்தேன், அவசியம் எழுதுகிறேன்..
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்..
Tuesday, August 02, 2005 11:47:00 PM
Post a Comment
<< Home