காதல் வலை - பகுதி 17
தேவதை இறங்கும் இடமும் வந்தது. "ஈஷ், நான் இப்படியே இறங்கி, இந்த ரயில்வே மேம்பாலம் தாண்டி போய்டறேன், வீடு வந்திடும்"
"சரி மாது, நாளைக்கு சந்திக்கலாமா?"
"இல்ல ஈஷ், நீ வீட்டுக்குப்போ, நாம அடுத்தமுறை சந்திப்போம்"
ஆட்டோவை நிறுத்தச்சொல்லி இறங்கினோம். தேவதை அப்போதுதான் தான் மறந்திருந்த ஒன்றையும் நினைவு கூர்ந்து தன் கைப்பையில் இருந்த தங்கள் குடும்ப புகைப்படத்தொகுப்பினைக்காட்ட, அதிலிருந்து அவள் தனியாக கொச்சின் துறைமுகத்தில் அமர்ந்திருக்கும் ஒரு படத்தினை மட்டும் அவள் நினைவாக எடுத்துக்கொண்டேன்.
"சரி,நான் கிளம்பவா ஈஷ்?, கால் பண்ணுடா"
'சரிடி செல்லம், இரு உன் தங்கச்சி வந்திரட்டும்"
அவளின் தங்கையும் வந்து சேர, இருவரையும் வழியனுப்பிவிட்டு, தனியனாக மீண்டும் தமக்கை இல்லம் நோக்கி உள்ளமில்லாமல் திரும்பினேன்.ஏதோ ஒரு வலி, அவளை கடைசிமுறையாக காதலியாகப்பார்ப்பது அதுதானோ? என்ற ஒரு பயம், ஏனென்று தெரியவில்லை, ச்சீ, சீ அசடு, என்ன இது சின்னப்புள்ள மாதிரி என்று மனதினைத்தேற்றிக்கொண்டு, வீடு திரும்பினேன். அக்கா கேட்டார்கள்,"என்னடா ஆச்சி? ஒரு மாதிரி இருக்க? என்ன சொல்லுச்சி பாப்பா? எதுனா சண்டையா?"
"இல்ல அக்கா, என்னவோ மனசு ஒரு மாதிரி இருக்கு, அதுதான்"
"அடச்சீ அசடு, அதெல்லாம் ஒன்னுமில்ல, ஊருக்குப்போய் பேசு அவகிட்ட போன்ல"
"சரிக்கா, பேசறேன்"
மாலை முடிந்து இரவும் வந்தது, வீடு திரும்பி, தொடர்வண்டிப்பயணத்திற்கு என்னைத்தயார் செய்துகொண்டு கிளம்பினேன். வழியெங்கும் அவள் நினைவே ஒரு சங்கீதமாய்...அவளுக்கும் எனக்கும் மிகவும் பிடித்த இந்தபாடல் மனதிற்குள் ஒலித்துக்கொண்டே வந்தது, அந்த பாடலை உங்களுடனும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
மீண்டும் அதே தலைநகரம், அதே மக்கள், அதேவிடுதிவாழ்க்கை, எப்பொழுதுதான் முடியுமோ இந்த நரகவாழ்வு என்று ஒவ்வொருநாளும் ஒரு யுகமாகக்கடத்திக்கொண்டிருந்த ஒரு நாளில்தான் என் தேவதை என்னிடம் கேட்டாள்," ஈஷ், உன்னோட மின்னஞ்சல் கடவுச்சொல்லைக்கொடேன்"
"எதுக்குடா செல்லம்?"
"இல்லடா எனக்கு ரொம்ப போர் அடிக்குது, அப்போ அப்போ உன்னோட மின்னஞ்சல்ல வர்ற கவிதைகளை எடுத்து படிச்சிட்டு இருப்பேன், பொழுதும் போகும்"
"சரிடி, என்னோட கடவுச்சொல் ********"
"சரிடா, நான் அப்ப்போ அப்போ படிச்சி உனக்கும் விமரிசனம் தர்றேன்;) "
"ஏய், எதுனா மின்னஞ்சலை மாத்தி பதில் எழுதிடாதேம்மா, வம்பா போயிடும்"
"அதெல்லாம் செய்யமாட்டேண்டா செல்லம், எனக்கு தெரியாதா?"
அந்த நாள், அந்த நொடிப்பொழுது நான் கடவுச்சொல்லைக்கொடுத்தது என் வாழ்வின் திசையையே மாற்றப்போவதை அறியாமல் சந்தோசமாக உரையாடலை முடித்து தொலைபேசியை வைத்தேன்...
தொடரும்...
( என்ன தோழமையே? எப்படிச்செல்கின்றது தொடர்?அடுத்த பகுதி இன்னும் விருவிருப்பாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்...அடுத்த வாரம் வரை கொஞ்சம் காத்திருங்களேன் பிளீஸ்..)
பிரியமுடன்
ஸ்ரீஷிவ்...:) type="text/javascript">&cmt=0&postid=116362342532942799&blogurl=http://srishiv.blogspot.com/">
0 Comments:
Post a Comment
<< Home