இது தகுமா? ( நேற்றைய குண்டுவெடிப்பு -05-11-2006)
அன்பின் பதிவர்களுக்கு
வணக்கம் , வாழிய நலம், கனத்த இதயத்துடன் எழுதுகின்றேன் இந்த பதிவினை, என்ன நடக்கின்றது இங்கே குவஹாத்தியில்? எப்பொழுது இந்த மானிலம் வளரப்போகின்றது? ஏன் இது இங்கே நடக்க வேண்டும்? மாமுனி கோஸ்வாமி போன்ற பெரிய பேராசிரியர்கள் தலையிட்டும் ஏன் இந்த தான் தோன்றித்தனம்? உண்மையில் அவர்களுக்கு என்னதான் வேண்டும்? யார் அவர்கள்? அவர்களின் உரிமைக்காக அவர்கள் போராடுகின்றனர் என்று கூறினால் அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம், முட்டாள்தனம், ஏனெனில் அவர்கள் கேட்கும் அதே உரிமைதான் நேற்று குண்டுவெடிப்பில் இறந்துபோன 14 பொது மக்களூக்கும், ஏழை கூலிக்காரனுக்கும் இருந்தது இந்த உலகில் வாழ.அதனைப்பறிக்க இவர்கள் யார்?
நேற்று மாலை சரியாக ஒரு 6.20 மணி இருக்கும், நான் அந்த குண்டு வெடித்த பகுதி வழியாகத்தான் ஆட்டோவில் பண்ணாட்டு பொருட்காட்சி காண என் நண்பருடன் காமாக்கியா தேவி கோவிலில் இருந்து சென்றுகொண்டிருந்தேன். பொருட்காட்சியை கண்டுவிட்டு 7.30மணி பேருந்தினைப்பிடித்து எங்கள் ஐஐடிக்கு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் 7.36க்கு ஒரு அழைப்பு, ஷிவ் , எங்க இருக்கீங்க ? அப்படின்னு, நான் இப்போதான் ஃபேன்சி பஜார் தாண்டி, பராலுமுக் வழியா போய்க்கிட்டிருக்கேன் என்று நான் சொல்ல, பத்திரமா ஃபேன்சி தாண்டிட்டீங்களா? அங்கே மாலை குண்டு வெடித்ததாம் என்று தொலைபேசியில் கேட்டதும் உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன்.மதிய உணவு நான் எடுத்துக்கொண்ட அதே ஜேபீஸ் உணவகத்தின் பின்புறம் தான் வெடிப்பு நிகழ்ந்திருக்கின்றது. அந்த மாலை பொருட்காட்சிக்குச்செல்லாமல் அங்கே அருகிலேயே இருந்த ஒரு பூங்கா ( நாங்கள் வழக்கமாக அமரும் பூங்கா அது) வில் அமர்ந்திருந்தால் என்னவாகி இருக்கும்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
இந்தியாவின் பெரும்பான்மையான மானிலங்களை நான் சுற்றிப்பார்த்திருக்கின்றேன், கடந்துவந்திருக்கின்றேன், ஜம்மு காஷ்மீரைத்தவிர ஏறத்தாழ எல்லா மானிலங்களையும் பார்த்துவிட்டேன், வடகிழக்கில் அப்படி என்னத்தான் நடக்கின்றது? , வேறு எந்த மானிலத்திலும் இந்த அளவிற்கு வன்முறை தலைவிரித்து ஆடக்கண்டிலேன், உள்ளம் பதறுகின்றது உண்மையில். கதறிக்கதறி கண்களில் கண்ணீர் வற்றி வறண்டுபோன மக்கள், தன் ஒரு வேளை உணவிற்காக கூலிவேலை செய்யும் தொழிலாளீ, மூட்டை சுமப்பவர், இவர்கள் எந்த விதத்தில் இவர்களுக்கு சரிக்கு சமம் ஆவார்கள்? இவர்களுக்கு நெஞ்சில் துணிவிருந்தால் சென்று அந்த கஷ்மீர் தீவிரவாதியிடம் தன் தீரத்தினை காண்பிக்கட்டுமே? வீரன் என்று நிரூபித்து விவேகமாக அடிக்கட்டும். ஏன் பொதுமக்கள்? இப்படி பயமுறுத்தி கொன்று மக்களை பீதிப்படுத்தி அதன்மூலம் அவர்களின் கவனத்தினைக்கவரலாம் என்றோ, அவர்களின் கருணையைப்பெறலாம் என்றோ நினைத்தால் அவர்களை விட கடைந்தெடுத்த முட்டாள்கள் யாருமில்லை என்பதே என் கருத்து. இதுவரை எந்த இயக்கமும் இந்த வெடிப்புகளுக்கு பொறுப்பேற்கவில்லை, ஏற்றுக்கொண்டால் தெரியும் அவர்களின் கதி என்னவென்று அடுத்த தேர்தலில். மக்கள் ஏமாந்துகொண்டிருக்க மாக்கள் ஒன்றுமில்லையே? அவர்களின் சக்தியை விரைவில் காட்டுவார்கள், அவர்களின் பலம் அறியும் சமயம், இவர்களின் பலவீனம் அதிகரிக்குமே? அதை ஏன் மறந்தனர்? இன்று வந்த தகவலின் படி, பெல்டோலா சாரியாலி ( நான்முனை கூட்டு) சந்தியில் குண்டு வெடிப்பு என்று ஒரு தோழி தொலைபேசியில் தெரிவித்தார், அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தன, பொதுவாழ்வு பேரளவில் பாதிக்கப்பட்டிருந்தது, குவஹாத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும், மகேந்திர மோகன் சவுத்திரி மருத்துவமனை இரண்டும் திமிலோகப்பட்டது இன்று. எத்தனை ஓலக்குரல்கள்? எத்தனை சவங்கள்? இதுவா அமைதியைத்தேடும் வழி? அரசிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தத்தானே அத்தனை பெரியவர்களும் பாடுபடுகின்றனர்? ஏன் இந்த வெறி? புன்னகை தேசமாய் அமைதியாய் இருக்கும் அசாமில் ரத்த ஆறு தேவையா? மேலும் இன்று காலை 6.45 மணிக்கு இரண்டு முறை பூமி குலுங்கியது. இயற்கைத்தாயும் இவர்களை மன்னிக்கவில்லையோ? இப்படியே சென்றால் வடகிழக்கு இந்தியாவின் கதி? இப்போதே நம் தென் தமிழகத்தினை விட ஏறத்தாழ 25 ஆண்டுகள் பின் தங்கி இருக்கின்றது வடகிழக்கு, குறிப்பாக அசாம், இன்னும் இப்படியே இயற்கையின் சீற்றம் மற்றும் இவர்களின் குண்டுவெடிப்புகளில் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமானால் அசாம் மீண்டும் கற்காலத்திற்கே சென்று விடவும் வாய்ப்பிருப்பதை எண்ணி கவலையுடன் இந்த பதிவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இந்த வாரம் பிரார்த்தனை செய்யும்போது தோழர்கள் குண்டுவெடிப்பில் இறந்த அப்பாவி மக்களுக்காகவும் சேர்த்து பிரார்த்திக்குமாறு வேண்டி விரும்பி வருத்தத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவண்,
ஸ்ரீஷிவ்...அசாமிலிருந்து.... type="text/javascript">&cmt=3&postid=116282480001144024&blogurl=http://srishiv.blogspot.com/">
3 Comments:
திரு.சிவா அவர்களே தாங்கள் தப்பியதற்கு மகிழ்ச்சி. இதற்கு முன்பு உலகின் பிரச்னை வறுமை மற்றும் பஞ்சம் ஆகியவை இருந்தன. ஆனால் இனி வரும் காலத்தில் இந்த தீவிரவாதம்தான் உலகின் மிகக் கடுமையான பிரச்னையாக இருக்க போகின்றது.
Monday, November 06, 2006 7:13:00 AM
ஹாட் நியூஸ் ரிப்போட் போல இருந்தது...உங்கள் ஆதங்கத்தையும் கொட்டிவிட்டீங்க...நல்ல நடை..
Monday, November 06, 2006 7:51:00 AM
மிக்க நன்றி அனு, மற்றும் செந்தழல்
உண்மைதான் அனு, இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு, நம்ம தாத்தா காந்தி சொன்னதுதான், இல்லையென்றால் கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேதான் முடிவு....:(
ஸ்ரீஷிவ்..
Monday, November 06, 2006 11:03:00 PM
Post a Comment
<< Home