இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, June 25, 2005

தபூ சங்கர் கதைகள் 10-- நன்றி--திரு.மோகன் தாஸ்- கீதம் குழுமம்.

ஊருக்குள் இது ரொம்ப நாள் பழக்கம்!

நல்ல காரியங்களுக்காக வீட்டைவிட்டு யார் கிளம்பினாலும், எதிரில் உன்னை வரச் சொல்லி... உன் முகம் பார்த்துவிட்டுக் கிளம்புகிற கிராமம் இது. நீயும் யார் கூப்பிட்டாலும், முகம் நிறைய புன்னகையோடு மகாலட்சுமி மாதிரி எதிரில் வருவாய்.

உன் பாட்டியும் தாத்தாவும் பஞ்சம் பிழைப்பதற்காக இந்தக் கிராமத்துக்கு வந்தபோது, என் தந்தைதான் உங்களைக் கோயில் நிலத்தில் குடிசை போட்டுக்கொள்ள அனுமதித்தார்.

கொஞ்ச நாட்களிலேயே... நீ கோயிலைச் சுற்றி மண்டிக்கிடந்த புதர்களை வெட்டி எறிந்து நந்தவனமாய் மாற்றினாய். கோயிலுக்கு கூட்டம் வர ஆரம்பித்தது. உனக்கு முகராசிக்காரி என்கிற பட்டமும் கிடைத்தது.

கோயிலுக்கு பூஜைப் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி எங்கள் வீடு வருவாய். இன்றும் அப்படித்தான்... அதிகாலையிலேயே குளித்து முடித்த ஈரம் காயாமல் வந்திருந்தாய், உன் பாட்டியோடு.

உங்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு என் தந்தை உள்ளே போயிருந்தபோது... கொய்யா மரத்திலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. ஓடிப்போய் அந்தப் பூவைக் கையில் எடுத்த நீ அச்சச்சோ... விழுந்துட்டியா... அணில் தள்ளி விட்டுச்சா... என்றாய். பின்னர், அந்தப் பூவை அதன் மரத்தடியில் வைத்து கவலைப் படாதே... நீ காயாகி, பழமாகி யாருக்கோ உணவாவதை விட, நீ பூத்த மரத்துக்கே உரமானால், உனக்கு சொர்க்கமே கிடைக்கும் என்றபடியே, அதனை மண்ணிட்டு மூடினாய்.

உள்ளிருந்து என் தந்தை வந்து கொடுத்த பொருட்களை வாங்கிக்கொண்டு உன்னைப் போகச்சொன்ன பாட்டி... தனியாக என் தந்தையிடம்... நாங்க கண்ணை மூடுறதுக்குள்ள இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பாத்துடணும். அதுக்கு நீங்கதான் தயவு பண்ணணும் என்று கண்கலங்கினார். அட... இதுக்கு போய் அழுதுட்டு? நான் பாத்துக்கறேன் ஆத்தா... நீங்க போங்க! என்று உன் பாட்டியை அனுப்பிய என் தந்தை, கணக்குப்பிள்ளையை அழைத்து அந்தப் பொண் ணுக்கு ஒரு நல்ல பையனாப் பாருங்க... நாமளே எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வச்சிருவோம் என்றார்.

நான் என் தந்தைக்கருகில் போய் தயக்கத்துடன் உங்களுக்கு சரினுபட்டா... நானே அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேம்ப்பா என்றேன். என் தந்தையோ பெரும் புகைப்படமாய் இருந்த என் தாயைப் பார்த்து... பார்த்தியா உன் பையனை! என்று என்னை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார்.

மாலையே உன்னைப் பெண் கேட்க அப்பா கிளம்புகையில், உன்னோடு விளையாட நினைத்த நான், நீ எதிரில் வந்தால்தான் வருவேன் என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு உனக்காகக் காத்திருந்தேன்.

சற்று நேரத்தில்... வெட்கம் புடைசூழ நீ வந்தாய், உன் பாட்டியோடு.

உன் எதிரில் வந்து நின்ற நான் உன்னைப் பெண் கேட்க எங்கப்பா உன் வீட்டுக்குப் போயிருக்காங்க... நீ என்னடான்னா ரோட்டுல சுத்திட்டிருக்க! என்றேன் சிரிக்காமல்.

பாருங்க பாட்டி என்று நீ உன் பாட்டிக்குப் பின்னால் ஓடி ஒளிந்தாய்.

உன் பாட்டி சந்தோஷத்தில் கை கூப்பினார். உன் கண்களிலோ நீர்.

நீங்கதான் பாட்டி சந்தோஷப்படறீங்க... ஆனா, உங்க பேத்திக்குப் பிடிக்கல போலிருக்கே... அழுதே! என்றேன்.

அய்யய்யோ... நான் அழல! என்றுவேகவேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாய்.

இந்த ஊரில் எல்லோருமே அதிர்ஷ்டத்தை எதிரில் வரச் சொல்லிவிட்டு... கடந்து கடந்து போய் விட்டார்கள். எனக்குத்தான் அந்த அதிர்ஷ்டத்தைக் கட்டிக்கொள்கிற அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது!

type="text/javascript">&cmt=0&postid=111973266125891804&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது