இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, March 25, 2006

தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்


சின்னஞ்சிறு வயதினில்
ஒன்றுமறியா பருவத்தில்
குழவி பருவம் தாண்டி
மழலையில் நடைபயில்கையில்
ஓட்டிப்பழகிய நடைவண்டி,

மழலை பருவம் தாண்டி
மாணவப்பருவத்தினில்
ஆடிய கூட்டாஞ்சோறாட்டம்,
அருமையான பள்ளிதனில்
அழகிய கரும்பலகையில்
வெள்ளை சுண்ணாம்புக்கட்டியால்
எழுதும் எழுத்துக்கள்
தெளிவாகத்தெரிந்திடவே
கோவைத்தழையினையும்
அடுப்புக்கரியினையும்
அரைத்துப்பூசிய நாட்கள்,

மரவண்டி ஓட்டிய நாட்கள் போய்
பனங்காய் சக்கர வண்டி ஒட்டி
பல் தெரிய சிரித்த நாட்கள்,
ஈருருளியின் டயர் வண்டியில்
இரண்டுபேர் போகவே,
ஏகப்பிரயத்தனம் செய்து
உருண்டு விழுந்த நாட்கள்,


பொன்வண்டினைப்பிடித்து
தீப்பெட்டியிலடைத்து வைத்து
பகலினில் பள்ளிசெல்கையில்
(இன்றோ பள்ளி "செல்" கையில் ;) )
சட்டையில் ஒட்டிச்சென்று
இரவினில் அது இடும்
முட்டையைப்பார்க்கவே,
ஏங்கிக்காத்திருந்த நாட்கள்,

கதவினைப்பிடித்துக்கொண்டே
அம்மா வரும்வரை ஆடியபடி
சாலையைப்பார்த்து சோர்ந்த நாட்கள்,
தாத்தாவின் தோள் ஏறி
பேய்கதை கேட்டு பயந்து
தோளிலேயே தோய்ந்த நாட்கள்,

சிறுவயதில் சஞ்சயிகா திட்டத்தில்
சேமித்து வைத்த சிறுசேமிப்பு,
செட்டியார் கடையில்
சேமிப்பு அட்டையில்
நாளொன்றுக்கு நாலணா காசு
ஆண்டுமுழுக்க சேர்த்து
ஆண்டவர் கோயில் கொடையில்
அம்மாவிற்கு ஜாக்கெட்
எடுத்துக்கொடுத்த நாட்கள்,

மழைபேயும் நாட்களில்
அம்மாவின் முந்தானையில்
அடைகாத்த குஞ்சுபோல்
அடைந்தே வீடுவந்த நாட்கள்,
முதன் முதலாய் தாத்தா
முதியோர் உதவித்தொகைதனில்
வாங்கி ஓட்டிய ஈருருளி,

சத்தை பம்பரம் என்றும்
சீட்டுக்கட்டு என்றும்
கோலி என்றும் கில்லி என்றும்
எத்தனை எத்தனை விளையாட்டுக்கள்???

இன்று, பிறக்கையிலேயே
இணைய இணைப்புடன்,
பிறக்கும் குழந்தைக்கு,
காணக்கொடுத்துவைக்கலயே???
கண்கள் பழுதடைந்து,
காலாண்டு படிப்பிற்குள்
கண்ணாடி போட்டு
கால் தடுமாறி,
சுயத்தினை இழந்து
நிஜத்தினையும் இழந்து
ஒன்றும் மூன்றும் என்னவென்றால்
கணினியைக்கொண்டு வா
கணிப்பானை கொண்டுவா
எனும் குழந்தைதான்
நாளை நாட்டைக்காக்குமா???

பிறந்த குழந்தைக்கு புட்டிப்பாலாம்
தாய்ப்பால் கொடுத்தால்
தாய்மைக்கு பெருமை
தாய்க்கும் பெருமை ஆனால்
அழகு கெட்டுவிடுமாம், அம்மணிகள்
சொல்லுகையில் , நாளை
அமெரிக்காவிற்கு அடிமையாக்க
இன்றிலிருந்தே அவனை/ளை
மாற்றுப்பாலுக்கு தயாராக்கும் அன்னையே
இனியேனும் கொடடி உன்
உயிரான குழந்தைக்கு
உன் பாலை உயிராக்கி,

அதிலிருந்து வந்தவர்களே இன்றும்
நம் அனைவராலும் போற்றப்படும்
காந்தி, நேரு, குமரன், சிதம்பரம்,
புட்டிப்பால் குடித்து புத்திசாலியாய்
நாட்டுக்குப்பணிபுரிந்த
நல்லவன் ஒருவனைக்காட்டு,
நாளையே எடுத்து விடுகின்றேன் என் நாக்கை,

ஊட்டடி உன் குழந்தைக்குத்தாய்ப்பாலுடன்
தமிழையும், தாய்நாட்டுப்பற்றினையும்,
இரவினில் நிலவு காட்டி உணவு கொடடி
உன்னை தங்கத்தாம்பாளத்தில் உணவளிக்க
சொல்லவில்லையடி, தகரத்தில் கூட
தாய்ப்பாசத்தினையும் , தாய்மண்பாசத்தையும்
ஊட்டி வளர்த்தால் உயருமே
உன் மதிப்பும் உன் தாய்
மண் மதிப்பும் நாளை பாரில்....






type="text/javascript">&cmt=0&postid=114329491520173804&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, March 24, 2006

காதல் வலை - பகுதி 13

காதல் வலை - பகுதி 13


ஆமாம், அதை அதிர்ச்சி என்றே சொல்வேன், இன்பமாக என்னை வரவேற்ற என் தாய், தந்தை,

பாட்டி, தாத்தா, தங்கை, தம்பி, அனைவரின் அன்பிலும் திக்குமுக்காடிப்போனேன், ஆலம் கரைத்து

வைத்திருந்து என்னைவரவேற்றனர், என் தந்தை என்னை வரவேற்க தொடர்வண்டி நிலையத்திற்கே

கார் எடுத்து வந்திருந்தார். வீடு வந்த என்னை அம்மா, பாட்டி ஆலம்கரைத்து சூரைத்தேங்காய்

இட்டு கற்பூரம் காட்டி வரவேற்றனர், கண்களில் ஆனந்தக்கண்ணீருடன் இல்லம் நுழைந்தேன்.

அம்மாவின் கையால் ஒரு அருமையான உணவு உண்டு ஒரு குட்டித்தூக்கம். விடிந்ததும்

தோழர்களை சந்திக்க என் ஸ்ப்ளெண்டரை எடுத்துக்கொண்டு பறந்தேன்.

தோழர்கள், ஜான், முருகன், யேசு, எங்கள் உலகம் ஒரு தனி உலகம், ஒன்றாம் வகுப்பிலிருந்து

இன்றுவரை ஒன்றாகப்படித்து பழகி வருபவர்கள், எங்களுக்குள் மட்டும் எந்த வித பாகுபாடும்

பந்தாவும் , தற்பெருமையும் , உயர்வு தாழ்வும் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியில்

இருந்தாலும், எங்கள் சந்திப்பிடத்தில் நாங்கள் அனைவரும் சமம், எங்களுள் வேற்றுமை கிடையாது,

சொல்லப்போனால் எனக்காக தனத்திடம் அவள் காலில் விழுந்து எனக்காக அவளிடம்

பேசியவர்கள், அவள் முடியாது என்று சொன்னநாளில் எனக்கு மட்டும் ஆறுதல் சொல்லிவிட்டு

என்னைவிட அதிகமாக தனிமையில் அழுதவர்கள். என் உயிர்கள். அவர்களுடன் தனமும்

சேர்ந்ததுதான் ஆச்சரியம், மேலும், அதிர்ச்சி என்று நான் சொன்னது, தனம்......என்னோடு மறுபடி

பேசியது, ஆம், ஊருக்குச்சென்ற மறுநாள் ஒரு அழைப்பு எனக்கு, "நான் ஈரோட்டில் இருந்து சத்யா

பேசறேன், ஈஸ்வர் இருக்காரா?" "நாந்தான் ஈஸ்வர் பேசறேன், சொல்லு சத்யா", "என்னை தெரியுமா

உங்களுக்கு?" "என்ன சத்யா இப்படி கேட்கற? மறக்கமுடியுமா உங்களை எல்லாம்?" எனக்கு சத்யா

என்று ஒரு இணையத்தோழி இருந்தாள், ஆனால் அதற்கு அடுத்து வந்த ஒரு குரல் என்னை

அதிர்ச்சிக்குள்ளாக்கியது அது "தனம்".

"எப்படி இருக்கீங்க?" "நான் தான் தனம் பேசறேன்", "என்னை நினைவிருக்கா?" எனக்கு ஒரு

நிமிடம் ஒன்றும் புரியவில்லை, "தனம்??? எப்படி இருக்கே? எங்க இருந்து பேசறே?", "நான் , என்

சித்தி வீட்டிலிருந்து பேசறேன், சத்யா முதல்முறையா உங்க கிட்ட பேசறா, எப்படி அவள

தெரிஞ்சமாதிரி பேசறீங்க? எத்தனை சத்யா உங்களுக்குத்தெரியும்?" என்னால் அவளுக்கு பதில்

கூறமுடியவில்லை உடனே, "என்னோட ஒரு இணையத்தோழி பேரும் சத்யா தான் தனம், அதுதான்

அவளா இருக்கும்னு நெனச்சி பேசிட்டேன், மன்னிச்சிடு" என்றவனை சரியாக கிண்டல் செய்தவள்,

என்னிடம் கூறிய அந்த செய்தியிலேதான் அந்த அதிர்ச்சியைக்கண்டேன், "எனக்கு திருமணம்

நிச்சயமாகி இருக்கின்றது ஈஸ்வர்", ஏனோ நான் எதிர்பார்த்த அந்த மொத்த அதிர்ச்சி இல்லை என்

மனதில், ஆச்சரியமாகவும் இருந்தது,அடுத்துஅவள் கூறியதும்தான் "ஈஸ்வர், நீங்களும் யார்னா ஒரு

நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கனும்", என்ன சொல்வதென்று தெரியவில்லை,

அதேசமயம் தனத்திடம் கூறுவதற்கு என்னிடமும் ஒரு செய்தி இருந்ததை மறக்கவில்லை. "தனம்,

நானும் உனக்கு ஒரு செய்தி வச்சிருக்கேன், சொல்லறதுக்கு", "என்ன? சொல்லுங்க", "நானும் ஒரு

பொண்ண கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கேன்", "ரொம்ப சந்தோஷம் ஈஸ்வர்,அந்த அதிர்ஷ்ட

சாலி யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?", "உனக்கும் தெரிஞ்ச பொண்ணுதான் அவ தனம்","யாரு?"
"மாது", அடுத்த கணம் இருள்விழுந்த முகத்துடன் என்னைப்பார்த்து "வேண்டாம் ஈஸ்வர், நீங்க வேற

யார வேணா கல்யாணம் செய்துக்கோங்க, மாது உங்களுக்கு வேண்டாம்" , மனதில் வெடிகுண்டு

போட்டது போல உணர்ந்தேன்....
தொடரும்...
type="text/javascript">&cmt=3&postid=114323781419835009&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 16, 2006

எனக்குப்பிடித்த நான்கு விசயங்கள்.


எனக்குப்பிடித்த நான்கு விசயங்கள்

எனக்குப்பிடித்த 4 நபர்கள்
1) என் தாய் திருமதி.வேதா முருகையன்
2) என் தந்தை திரு.முருகையன் சுப்புலிங்கம்
3) என் குரு திரு.பாலகுமாரன்
4) என் முதல் காதலி.........

இருந்த 4 இடங்கள்
1)துக்காப்பேட்டை (செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்)
2)மேல்மருவத்தூர் (பொறியியல் படித்தது 90 முதல் 94 வரை)
3)சேலம் (எம்.ஈ. படித்தது 95 முதல் 97 வரை)
4)குவஹாத்தி (அஸ்ஸாம், என் முனைவர் பட்டத்திற்காக 2001 முதல்

இன்றுவரை தவமிருக்குமிடம்:) )

பிடித்த 4 இடங்கள்
1)என் வீட்டு சமையல் அறை ( என் பாட்டியும் அம்மாவும் சமைக்கும்

சமயம் சுடச்சுட எடுத்து சாப்பிடுமிடம் ;) சுந்தர் அண்ணா அடிக்க வராதீங்க

:D)
2)என் ஊரின் ஆற்றங்கரை ஆஞ்சனேயர் கோவில் திட்டு ( உட்கார்ந்து

மணிக்கணக்கில் ஓய்வெடுத்தபடியே நாங்கள் (தோழர்கள்) எதிர்காலம் பற்றி

திட்டம் தீட்டிய இடம்)
3)பாண்டிச்சேரி அருகே உள்ள நோனாகுப்பம் படகுத்துறை (மிக

அமைதியான இடம், ஒரு காலத்தில் சென்றிருந்தது)
4)குவஹாத்தியிலிருக்கும் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை மாலைவேளையில்

அமர்ந்திருப்பது.

போக விரும்பும் 4 இடங்கள்
1)இளங்காடு (தஞ்சை மாவட்டத்திலிருக்கும் ஒரு அழகிய பசுமையான

கிராமம்)
2)என் தாத்தாவின் தாத்தா பிறந்த இடமான சின்ன காஞ்சிபுரம் (எங்க

இருக்குன்னு தெரியல)
3)மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (அடுத்த ஆண்டு

வரவிருக்குமிடம், அங்கிருந்து சுவிஸ் வரை ஒரு நடை போய்வரவேண்டும்

)
4)உலகத்தின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் (அதிக மழைபொழியுமிடமான

சிரபுஞ்சியைப்பார்த்துவிட்டேன்)

பிடித்த போக விரும்பும் 4 விடுமுறை இடம்
1)என் தேவதைக்குப்பிடித்த எந்த இடமும் :)
2)இத்தாலி (ஆல்ப்ஸ் மலைத்தொடர்களின் மேலே அப்படியே ஒரு

பறவைபோல பறக்கவேண்டும் )
3)டார்ஜிலிங்
4)அந்தமான் நிகோபார் தீவுகள் ( மூன்றுவருடங்களுக்கு முன்பு அங்கு

சென்றபோதே தீர்மானம் செய்தது, அங்குள்ள ரோஸ் ஐலண்டில்தான்

தேன்னிலவிற்கு செல்லவேண்டுமென்று :) )

பிடித்த 4 உணவுவகைகள்
1) பொங்கல் :) என்றும் பிடித்தது :)
2)என் அம்மா கையால் சுடும் பூப்போன்ற இட்லி (எத்தனை

வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் :) )
3)அம்மன் கோவில் கூழ், வெங்காயத்துடன்.
4)என் அம்மா செய்யும் நேற்று சாதத்தின் புளியோதரை (அற்புதமாக

இருக்கும்:) )

பிடித்த 4 உணவகங்கள் (புதிது)
1)சென்னை பாரிமுனையிலுள்ள சரவணபவன் (16இட்லிகள் அருமையாக

இருக்கும்)
2)சென்னை கந்தன்சாவடியிலுள்ள சரவணாபவன்(இது சரவணபவன் அல்ல,

நான் 1998ல் மென்பொருள் படித்தபோது உண்டு வாழ்ந்த உணவகம்)
3)குவஹாத்தி ஜே பி'ஸ் உணவகம் (இரண்டு இட்லி வெறும் 45

ரூபாய்தான் ;) )
4) தில்லியில் மாள்வியா நகரில் உள்ள தெலுங்கு மெஸ் (அருமையான

உணவு)

பிடித்த 4 விலங்குகள்
1) நாய்
2)பூனை
3)சிங்கம்
4)காண்டாமிருகம் (அசாம்ல அதிகம் பா ;) )

பிடித்த 4 உயிரியல் பூங்காக்கள்
1)குவஹாத்தி உயிரியல் பூங்கா
2)சென்னை செத்த காலேஜ் ;)
3)வேடந்தாங்கல் ( பி ஈ படிக்கறப்போ வாரா வாரம் போய் வர்றது)
4)காசிரங்கா (காண்டாமிருக சரணாலயம் - குவஹாத்தி)

பிடித்த 4 பறவைகள்
1)மயில்
2)குயில்
3)கோழி
4)புறா

பிடித்த 4 படங்கள்
1)இதயம்
2)காதலுக்கு மரியாதை
3)சலங்கை ஒலி
4)மன்னாதி மன்னன் (புரட்சித்தலைவர் நடித்தது)

பிடித்த 4 நடிகர்கள்
1)புரட்சித்தலைவர் எம் ஜி ஆர்
2)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
3)காதல் மன்னன் ஜெமினி (அ)காதல் இளவரசன் கமல்
4)ஜாக்கிசான் (அ)ஆர்னால்டு சுவார்சனேகர்

பிடித்த 4 நடிகைகள்
1)ஜூலியா ராபர்ட்ஸ்
2)கேத்தரினா ஜீட்டா ஜோன்ஸ் (டெர்மினல் மற்றும் மாஸ்க் ஆப்தி சோரோ

சூப்பரா நடிச்சிருப்பாங்க) (அ) கேட் வின்ஸ்லெட்
3)சாவித்ரி(பாசமலர்) (அ) பத்மினி (மன்னாதி மன்னன் - கண்கள் இரண்டும்

இன்று உம்மைக்கண்டு பேசுமோ???? காலத்தால் அழியாத காவியம்)
4)சிம்ரன் (அ) குஷ்பு (அ) காதல் சந்தியா ;)

சந்தோஷமான 4 நிகழ்வுகள்
1)முதல் முதலாக என் குரலை ராஜ் எப் எம்மில் கேட்டது :)
2)என் முதல் மாத சம்பளத்தில் என் தங்கைக்கு 1800ரூபாயில் சுடிதார்

வாங்கிக்கொடுத்தது. மற்றும் என் பாட்டி இறக்கும் முன் அவர்களுக்கு

சேலை வாங்கி கொடுத்தது.
3)முதன்முதல் தைரியமாக என் காதலை என் காதலியிடம் சொன்னது
4)என் தங்கை வங்கி மேலாளர் ஆன செய்தி :)

பிடித்த 4 விசயங்கள்
1)அரட்டை அடித்தல்
2)கவிதை /கட்டுரை எழுதுதல்
3)ஊரார் பிரச்சனையை எடுத்து செய்தல்
4)பாடுதல்

என்னிடம் இருக்கும் எனக்குப்பிடிக்காத 4 விசயங்கள்
1)முன்கோபம்
2)சிகரெட்
3)சோம்பல்
4)முன் திட்டமிடாமை (preplanning)

சோகமான 4 விசயங்கள்
1) என் பாட்டி மறைவிற்கு செல்லமுடியாமல் அவர் முகத்தினைக்கூட

இறுதியாகப்பார்க்க முடியாதது :( ( என்னை எடுத்து வளர்த்தவர்கள்

அவர்தான்)
2)கையில் பணமில்லாத ஒரு சமயத்தில் என் நெருங்கியவர்களே என்னை

வருந்த வைத்தது
3)என் மண நாளாக ஒரு நாளைக்குறித்து அந்தநாளில் என் திருமணம்

நடைபெறாதது.
4)நான் இழந்த என் முதல் காதல்

பிடித்த 4 நண்பர்கள்
1)ராதா (ஆட்டோகிராப் திவ்யா போல இவர்)
2)செந்தில்,யேசையா, வில்சன் ( இவர்களைப்பிரிக்கவிரும்பவில்லை, என்

பள்ளிகாலத்திலிருந்து இன்று வரை தோழர்கள்)
3) என் தங்கை ( காஞ்சனா, அவருக்கு தெரியாத விசயங்கள் ஏதுமில்லை

என் வாழ்வில்)
4)என் இணைய நண்பர்கள் ( என் சுவாசங்கள்)

என் இணைய நண்பர்கள் 4 பேர்(நெஞ்சிற்கு நெருக்கமானவர்கள்)

1)சம்பத் என்னும் அன்புச்செல்வன்(அமெரிக்கா)
2)சங்கீதா (லண்டன்)
3)வில்லி ஜாய்ஸ் ஃபியாட்டி (அமெரிக்கா)
4)சிமீனா (ximena) (ச்சிலி)
type="text/javascript">&cmt=5&postid=114250286459674587&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, March 10, 2006

காதல் வலை - பகுதி 12





அவளைக்காணாமல் தவித்திருந்த நேரம், நினைவுகள் மீண்டும் பின் செல்ல, கல்லூரியின் விடுதிவிழாவில் நான் நடித்த ஒரு நாடகம் நினைவிற்கு வந்தது. சிறு வயதில் பள்ளி நாட்களில் நாடகம் போட்டது தவிற வேறு அனுபவம் இல்லாத காரணத்தால் அப்படியே ஒரு வழியாக சமாளிக்க நினைத்து ஒத்துக்கொண்டேன். முதலாமாண்டு என் ஆராய்ச்சி சமயம் அது, எங்கள் விடுதியில் ஆராய்ச்சி மாணவர்களின் தலைமையில் அனைத்து விடுதி விழா நடைபெற்றது, அதில் ஒவ்வொரு விடுதியும் தங்கள் தனித்திறமையை காட்ட வேண்டும், எங்கள் விடுதியில் இருந்து நாடகம் போட்டனர், சீதா ஹரன் என்பது நாடகத்தின் பெயர். நவீன ராமாயணம் என்று வைத்துக்கொள்வோமே? அதில் என் தோழர்களுடன் நானும் ராவணன் வேடமேற்று நடித்தேன். அது உண்மையிலேயே எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். நாடகத்தின் சாராம்சம் இதுதான், எங்கள் விடுதியின் சார்பாக எங்கள் கல்லூரி ஆண்டுவிழாவில் ஒரு நாடகம் போடுகின்றோம், அதில் ராமர், லட்சுமணர், சீதை, மற்றும் ராவணன் வருவதுபோல் காட்சி, அதற்காக வடக்கு மானிலங்களைச்சேர்ந்த தோழர்கள் பெயர் கொடுத்து, அந்த அந்த வேடங்களுக்கான வசனங்களை வாங்கிப்படித்து மனனம்செய்துவைக்கின்றனர். ஆனால் நாடகம் போடும் தினம் அன்று காலை திடீரென்று ராமன் வேடம் போடும் மாணவன் தன் தோழியுடன் நகருலா சென்றுவிட, ராவணனும் தனியே நடிக்க பயந்து நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட, விடுதியின் பெயரைக்காப்பாற்றியாகவேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் திடீரென்று சிலரை பிடித்து வசனங்களைக்கொடுத்து படித்துவந்து மாலை நடிக்கச்சொல்கின்றனர், அதில் நடக்கும் அமர்க்களங்களை ஒரு ஒருமணிநேர முழுநீள நகைச்சுவை நாடகமாக கொடுத்திருந்தோம்.

அதில் என் பாத்திரம், ராமன், ராவணன் ஓடிவிட்டபின்னர், அவசரத்திற்கு கைகொடுக்கும் தென்னிந்திய இந்தி தெரியாத தமிழ் ராவணன் வேடம், இந்தியை தமிழில் எழுதி நம் வழக்கு மொழி சொலவாடையில் பேச, கைத்தட்டல் பிய்த்துக்கொண்டு போனது. உண்மை சொன்னால் அதன்பின்னர் எங்கள் கல்லூரி வட்டாரத்தில் அந்த நாடகத்திற்குப்பின் எனக்கு ராவணன் என்றே பெயர் வந்துவிட்டது.:) , பேராசிரியர்கள் எனைக்காணும்போது செல்லமாக ,ராவணா, கஹான் ஜாரஹேஹூம்?? கார் மே ஆவோ, என்று தமது காரில் லிப்ட் கொடுத்து அழைத்துச்செல்லுமளவிற்கு ஆகிவிட்டதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் :). அதில் நடிக்கின்றேன் என்றதும் கண்மனிக்கு ஒரே சிரிப்பு, எனக்கு அவள் அனுப்பிய வாழ்த்து அட்டையில்," கம்சன், ராவணன் என அனைத்து வேடங்களும் இப்பவே போட்டுக்க, வாழ்க்கைல கடைசி கடைசியா கல்லூரில படிக்கற, அதனால போடற ஆட்டம் எல்லாம் இப்பவே போட்டுக்க "என்று வசனம் போட்டு அனுப்பி இருந்தாள்.


இதை எல்லாம் நினைத்தபடியே தற்சமயமாக கோமா நிலைக்குச்சென்றிருந்த என் செல்பேசிக்கு உயிரளிக்க தொடர்வண்டி நிலையத்தின் வெளியே இருந்த ஒரு தொலைபேசியகத்திற்கு சென்றேன், அங்குதான் மின்னிணைப்பு இருந்தது. ஒரு 15 ரூபாய் வாங்கிக்கொண்டு 10 நிமிடங்கள் மின்னேற்றம் செய்து கொடுத்தான். சென்னையும் ஏமாற்று இடமாகிப்போனதை எண்ணி நொந்தபடியே திரும்பி வண்டியை நோக்கி காலெடுத்து வைத்தவனின் கண்ணில் சிக்கிய காட்சி.....என் கண்மணி கண்ணெங்கும் பதற்றமுடன், மனமெங்கும் என்னைத்தவறவிட்டுவிடுவாளோ என்ற சோகத்துடன் வெளியே வந்துகொண்டிருந்தாள் தண்ணீரருந்த ( காலையிலிருந்தே சாப்பிடாமல் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து தவம் கிடந்திருக்கின்றாள் :( )வெளியே வந்துகொண்டிருந்தாள். தூரத்தில் என்னைக்கண்டதும் அவளால் நம்பமுடியவில்லை, மாது....என் குரல் அவளின் காதுகளை அடையும்முன் அவள் கால்கள் என்னை அடைந்திருந்தன. அப்ப்ப்ப்பா , என்ன ஒரு வேகம்??? வந்தவள் அப்படியே என் கைகளை இருக்கப்பிடித்துக்கொள்ள, அவள் கண்கள் அவளறியாது மாலை மாலையாக தேக்கிவைத்திருந்த கண்ணீரை எனக்கு பன்னீராக சொறிய, " என்னடா செல்லம்? என்ன இது சின்ன புள்ளமாதிரி?" என்று அவளின் கையை ஆதரவாகப்பற்றி முதல்முறையாக நேரில் அவள் காதலனாய் அவளை என் தோளில் அனைத்தபடி என் தொடர்வண்டியை நோக்கி நடந்தேன். என்னவோ எத்தனையோ ஆண்டாண்டுகளாக பழகிய ஒரு பந்தம் மனதில், என் பெட்டி வந்ததும், அவளை உள்ளே அழைத்துச்சென்று என் இருக்கையிலிருந்து ஒரு இனிப்புத்துண்டை எடுத்து கொடுத்தேன்.என்னவோ கட்டிய மனைவியிடம் இருக்கும் ஒரு உரிமை, நெருக்கம், முதல்முறை நேரில் சந்திக்கையிலேயே இருந்தது கண்டு இருவரும் மகிழ்ந்தோம். நடைமேடைக்கு வந்து அவளின் மென்பொருள் குறுந்தகடுகளை அவளிடம் அளித்துவிட்டு, இருவரும் ஒரு கோப்பை ஆப்பிள் சாறு வாங்கி அருந்தினோம். பாதி அருந்திக்கொண்டிருக்கையில் வண்டிபுறப்பட அடையாளம் காட்ட, பிரிய மனமின்றி, இரண்டு நாள் கழித்து வந்து அவளை சென்னையில் சந்திப்பதாகச்சொல்லிவிட்டு கிளம்பினேன் என் வீடு நோக்கி, அந்தத்தொடர்வண்டியும், என் உயிரை சென்னையிலேயே கழற்றி விட்டுவிட்டு உடலை மட்டுமே சுமந்த படி என் ஊர் நோக்கிப்பயணிக்க...கண்களில் கனவு தாங்கி காத்திருந்த என் தாய் , தந்தையரை பாசமுடன் காண விரைந்தேன்...அங்கே எனக்கு காத்திருந்த ஒரு அதிர்ச்சி தெரியாமல்....
தொடர்வேன் :)
மன்னிக்கவும் ரொம்பநாளைக்கு அப்புறம் இந்த பகுதி வருகின்றது, இடையில் சில் முக்கிய பணி நிமித்தமாக வெளியூர் பயணத்தால் எழுத முடியவில்லை...விரைவில் அடுத்த பகுதியை தருகின்றேன்...
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=5&postid=114208463716016547&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 09, 2006

என் அனுபவங்கள் - இந்தியன் ரயில்வே ஒரு சபாஷ் ஒரு கொட்டு

இன்று தேதி 8-3-2006,ஒரு நல்ல பயணத்தினை எதிர்பார்த்தே இந்தியன் ரயில்வேயின் பயணப்பதிவினை இணையத்தின் மூலம் பதிந்தேன், குவஹாத்தியிலிருந்து புது தில்லிக்கு. தொடர்வண்டி முன்பதிவு நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை, இரண்டு மூன்று மணிநேரம் வரிசையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லை, எல்லாமே உங்கள் மடிக்கணினியிலோ அல்லது மேசைமேலான கணினியிலோ பதிவு செய்து பயணச்சீட்டினையும் தங்கள் பதிப்பானிலேயே அச்சிட்டு எடுத்துக்கொண்டு நேரே தொடர்வண்டிக்குச்செல்லவேண்டியதுதான். உண்மையிலேயே ஒரு புதிய அனுபவம், இந்தியன் ரயில்வேயின் பாராட்டப்படக்கூடிய பல நல்ல முன்னேற்றங்களில் இதுவும் ஒன்று . இப்போது கொட்டுக்கு வருவோம், உண்மையில் என்னை மிகவும் எரிச்சலூட்டியது இதில் வந்த முன்பதிவு செய்யாத பயணிகளே.

மிகவும் கடினமாகப்போனது இந்த முன்பதிவு செய்யாத பயணிகளின் தொல்லையே, மிகவும் அதிகமான அளவிலான பயணிகள் என் பெட்டியிலும் மற்ற பெட்டிகளிலும் ஏறிக்கொண்டு மிகவும் தொந்திரவு செய்துவிட்டனரே???? பயணமே நரகமோ என்ற அளவிற்கு ஆகிவிட்டது, குறிப்பாக வடக்கு மானிலங்களான உத்திரப்பிரதேசம்,பீகார் போன்ற இடங்களில் ( இதை எழுதுவது பரேலி என்ற நகரில் என் தொடர்வண்டி நிற்கும்போது என் மடிக்கணினியிலிருந்து) இந்த தொல்லை அதிகம். இப்போது கூட ஒரு பெண்மனி வந்து உரிமையாக உட்கார்ந்துகொண்டு எழமறுக்கின்றார், என்ன செய்ய? வேதனைக்குறிய விசயம் இதுவே, இதுவே என்போன்ற பல நடுத்தர வர்கத்தினரை தொடர்வண்டி பயணத்திலிருந்து , விலை மலிந்துவரும் விமானப்பயணத்திற்கு மாற்றிவிடுமோ என்ற அச்சத்தினால் இந்த பதிவினை இங்கு இடும் அவல நிலைக்கு என்னைத்தள்ளியது என்று கூறினால் அது மிகையாகாது. வணக்கம், என் மடிக்கணினியில் மின்சேமக்கலன் குறைந்ததால் மீதியை குவஹாத்தி வந்து எழுதுகின்றேன்..

ஒரு விசயம் சபாஷில் எழுதவேண்டியது, மெட்ரோ தொடர்வண்டி ( தில்லியின் உள்ளேயே ஓடும் வண்டி), மிக்க அருமையான விசயம், நம் தமிழகத்திற்கு இது மிகவும் அவசியமே, ஏன் நம் அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கின்றனர் என்றுதான் தெரியவில்லை. என் பயணத்திட்டத்தின்படி என் தொடர்வண்டியின் புறப்படுநேரம் காலை 8.25மணி, புதுதில்லி ரயில் நிலையம் நான் என் தோழனுடன் சென்றபோது சமயம் 8.10, அங்கு இருந்த ஒரு கண்காணிப்பாளரிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது என் தொடர்வண்டி புறப்படுவது பழைய தில்லியிலிருந்து என்று. என்ன செய்வதென்றே புரியவில்லை, கையில் இருந்தது 15 நிமிடங்களே, புது தில்லியிலிருந்து பழைய தில்லிக்கு குறைந்தது 5 முதல் 10 கிமீ இருக்கும், வெளியில் வந்து மூன்றுருளி (ஆட்டோ) ஓட்டுனரிடம் விசாரித்ததில் 200ரூபாய் வேண்டுமாம், கொடுத்துத்தொலைக்கலாம் என்றால், ஆவாத் அசாம் எக்ஸ்பிரஸ் வண்டியை பிடிக்கமுடியாதாம், 25 நிமிடமாவது ஆகுமாம் போக. அப்போதுதான் கடவுள் போல ஒருவர் மெட்ரோ வண்டியை பயன்படுத்தச்சொன்னார், 3 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்றார், சுத்தமாக நம்பமுடியவில்லை, இருப்பினும் கடைசி முயற்சியாக முயன்று பார்த்துவிட நினைத்து 6 ரூபாய் பயணக்கட்டணம் கொடுத்து பயணச்சீட்டு எடுத்து பாதாள தொடர்வண்டியினை நோக்கிச்சென்றோம், நம்பத்தான் முடியவில்லை. ஓராண்டிற்குமுன்பு சிங்கப்பூரில் சென்ற மோனோரயில் நினைவிற்கு வந்தது. அத்தனை சுத்தம், முழுவது குளிருட்டப்பட்டது, தரையிலிருந்து சுமார் 40அடி ஆழத்தில் செல்லும் தொடர்வண்டி, 3 நிமிடத்தில் பழைய தில்லி வந்தது, ஓட்டமாக ஓடி படிகளில் ஏறினால் எதிரில் பழைய தில்லி தொடர்வண்டி நிலையம், என் வண்டி கண்முன்னே, நம்பமுடியாமல் சென்று என் S2 பெட்டியை அடைந்தேன்.

தொடர்கின்றேன், இன்று மார்ச் 9, என் பிறந்த தினம், இதனை மீண்டும் பதிப்பிக்கின்றேன். உண்மையில் என்னை மிகவும்தொல்லைக்குள்ளாக்கியது என் திரும்பு பயணமே, செல்லும்போது பர்வதார் சம்பர் கிராந்தி தொடர்வண்டியில் சென்றேன், குவஹாத்தியிலிருந்து தில்லிக்கு. மொத்தமே 7 நிறுத்தங்கள், உணவும் அருமை, நன்றாகவே இருந்தது, ஆனால் திரும்புகையில் தெரியாமல் பிக்கானர்-அசாம் ஆவாத் ஆசாம் எக்ஸ்பிரஸ் என்ற வண்டி, ஐயகோ, என் விரோதிக்குக்கூட அந்த வண்டியில் இடம் கிடைக்கக்கூடாது என்றே பிரார்த்திப்பேன். அப்படி ஒரு கொடுமை, பீகார் மானிலத்தில் வண்டி நுழைந்தது, என்ன ஒரு மாயம், வண்டியில் பயணச்சீட்டு பரிசோதகரிலிருந்து அனைவரும் ஊமை செவிடாகிவிட்டனரோ என்ற ஒரு எண்ணம். யாரும் பதிவு செய்யாதவர்களை கண்டுகொள்ளவில்லை, மேலும் அங்கு படித்த படிக்காதவர்களுக்கும் இந்த குடும்பக்கட்டுப்பாட்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஒரு காவல் பணியில் இரண்டு நட்சத்திர அந்தஸ்து உள்ளவர், மேற்கு வங்கத்து அம்மணியை மணந்திருக்கின்றார், அவர் தலைப்பு திவாரி என்று வருகின்றது, நம்பமாட்டீர்கள் 5 குழந்தைகள் அவருக்கு, ஒரு கைக்குழந்தை, இரண்டு வயது வரும் வயதுடைய பெண் குழந்தைகள், ஒரு 3 வயது நிரம்பிய பெண் குழந்தை, ஒரு 9 வயது நிரம்பிய மகன். இவர்களுக்கு முன்பதிவு செய்யவில்லை அவர், பரேலியிலிருந்து குவஹாத்தி வரை, என் படுக்கையை குழந்தைகளுக்கு தாரை வார்த்துகொடுத்துவிட்டார் பெருந்தன்மையாக :( வேதனையான விசயம், அது என் படுக்கை. :( என்ன சொன்னாலும் புரிந்துகொள்ளவில்லை கடைசிவரை :(. ஒரு ராணுவப்பணியாளர் அவருக்கும் 5 குழந்தைகள், இவருக்கும் முன்பதிவு இல்லை, நான் கஷ்டப்பட்டு தில்லியிலிருந்து 120ரூபாய் அதிகம் போட்டு கணினியில் தட்கல் முறையில் முன்பதிவு செய்து வந்தால், சுலபமாக நம் ஊரில் துண்டு போட்டு சீட்டு பிடிப்பதுபோல், குழந்தைகளை என் படுக்கையில் நான் கை கழுவ சென்றிருந்த சமயத்தில் போட்டு, ஒரு இரவு முழுதும் என்னை குளியலறை பக்கம் உட்காரவைத்துவிட்டார்கள். :( மிகக்கொடுமை ஐயா....என்று திருந்துவார்கள் இந்த மக்கள்? ரயில்வே மந்திரியின் சொந்த மானிலத்திலேயே இந்த கதியா? ரயில்வே துறையை வேறுமானிலத்தவருக்கு மாற்றும்வரை நம் நாட்டின் ரயில்வே முன்னேறாது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை..சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா???
வருத்தமுடன்,
சிவா..அஸ்ஸாமிலிருந்து


type="text/javascript">&cmt=8&postid=114193768824177023&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது