இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, August 22, 2005

வெண்மை என்பதே உண்மை...

வெளிச்சமே வாழ்வு
வெள்ளையே நிறம்
கருமை என்பது வெறுமை
வெண்மை என்பதே உண்மை.

தளிர்நிலா வானில்
தவழ்ந்து வருதல் வெண்மை,
வாய்ப்பல் தெரிய குழந்தை
வழியச்சிரிப்பது வெண்மை.

சூரியன் அளிக்கும் வெளிச்சமில்லையேல்
அஸ்தமிக்குமே இக்குவலையம்?
பயிர்கள் பச்சயத்தை எங்கே தேட?
வெளிச்சமே உண்மை,
அதுவே வெண்மை, மென்மை, மேன்மை..

வெளிச்சம் இருப்பதால் தானே
இருள் ஒன்று இருப்பது தெரிகிறது?
பகலொன்றில் தானே இரவொன்றின்
இன்பம் புரிகிறது? பகலின்றிப்போனால்?
பரவசம் இல்லையே?

வெளிச்சத்தில் இருக்கும்
வெள்ளைப் பணத்திற்குத்தான்
என்றுமே மரியாதை ஐயா,
இருட்டில் இருக்கும் கருப்பு
பணத்திற்கு பலம் இல்லையே என்றும்?

வெள்ளை மனம் உள்ளவனையே
வெளிச்சம் உள்ளவனையே
உதாரணமாய் அளிக்கிறோமே?
இருளோடி இருக்கும் பாதையில் தானே
இன்னல்கள் அதிகம் என்றும்?

கயவன் வருவானோ?
காவலன் வருவானோ?;)
கருப்பு வருமோ?
காற்று வருமோ என்ற பயம்
வெளிச்சத்தில் இல்லையே என்றூம்?

வெள்ளை மனம் உள்ளவன் என்றே
வெளிப்படையாக இயம்புவரே பெரியோர்?
வெளிச்சமே விவேகம் ஐயா,

இருட்டு என்றும் நம்
மனதின் திருட்டே.....:)

பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=1&postid=112474845713461433&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

உன் அர்ச்சனைகள்...

பொறுக்கி, பொறம்போக்கு
மானம் கெட்டவன்
நல்ல குடும்பத்தில் பிறக்காதவன்
நாதாறி, ஹா ஹா ஹா
எத்தனை எத்தனை புதிய
பட்டங்களடி கொடுப்பாய்?

ஏறத்தாழ இரண்டு மாதங்கள்
இடைவெளிக்குப்பின் உனக்கு
ஒரு அழைப்பு விட எண்ணியதற்கா
எனக்கு இவ்வளவு அன்பு அர்ச்சனைகள்?
என்மீது இத்தனை அன்பா???
உனக்காகத்தானடி இந்த வெண்பா...:)

நான் படிக்கும் கல்லூரி கூட
நான்கு ஆண்டுகள் உழைப்பை
உறிஞ்சிக்கொண்ட பின்னரே
பட்டம் என்ற பெயரில் ஒரு
சட்டம் போட்ட விட்டத்தைக்
கொடுத்தது, ஆனால் நீயோ

எனைப்பிரிய நினைத்த
ஒரு வருடத்திலேயே
எத்தனை பட்டங்கள் வழங்கினாயடி?
எத்தனை முறை சொல்ல உனக்கு?
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் என்றே??

பெண்புத்தி பின் புத்தி என்றே
எல்லோரும் உறைப்பது போலே
நானும் நடப்பேன் என்றால் நான்
என்னடி செய்வேன்?

சொல்லாலடித்த சுந்தரி என்ற
திரைப்பட வரிகள் கூட
எனைச் சுடவில்லையடி,
எனை மணப்பதுவிட சிகப்பு
தனை மணத்தல் நலம் என்றாயே,
நானென்ன அவ்வளவு விஷமா?

நறுமணம் பெற்றதெல்லாம் நல்லவையோ
நாற்றம் கெட்டவை அனைத்தும் கெட்டவையோ
அல்ல என் அன்னையே, உன்னையே
என் ஊற்றுக்கண்னாக அல்லவா அனுமானித்திருக்கிறேன்?
என் ஆரணங்கே, அற்புதமே,
அதிகாலை பொற்பதமே,

விடியலில் வருவாயோ
என் வேதனைகள் தீர?
உளம் குறை தீர வாராயோ
என் உயிர் உனைச்சேர?

காத்திருக்கிறேன் கண்மனி
காதலோடு என்றென்றும்.....

உன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=112470679638446480&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, August 17, 2005

கண்திறந்த கண்ணகி

இதயத்தில் விஷத்தையும்
உதடுகளில் அமுதையும்
எப்படியடி உன்னால் இயல்பாக
கொடுக்க முடிந்தது?

தவறிழைத்தான் என்ற
தகவல் வந்ததும்
தவறிழைத்தேனே நானும்
பாண்டியன் கோவலனுக்கு
இழைத்த அதே கொடுமை,

இங்கே அரண்மனையாட்களுக்கு
மாறாக ஆரணங்கு..........

யானோ கள்வன் என
கேட்கக்கூட கோவலனிற்கு
சந்தர்ப்பமளிக்கவில்லையே?

நானே கொடியோன்,
மன்னிப்பாயா கோவலா?
மாதவியாய் மற்றவரை நீ
நோக்கினாயா என நான் கேளேன்,
மரபிலக்கியம் இல்லையே யாரும்?
அதிலே கூட தளை தட்டுவதில்லையா?

எதுவுமே ஒரு முற்றுப்புள்ளி இல்லை,
அனைத்திலுமே ஒரு காற்புள்ளி (,)
இருக்கின்றதென்றுரைத்து என்
கண்திறந்த கண்ணகிக்கு கடிதம் மூலம்
நன்றி கூற எண்ணினேன், அதைவிட
இந்த கவிதை மூலம் கூறுவதே
சாலச்சிறந்ததெனப்பட்டதால்
இந்தக்கவிதையுடன் களத்தில்...

சமயம் கிட்டும் கால் சந்தம் படிக்க
வந்துசெல்வேன்...
சரணமென்றேன்....
type="text/javascript">&cmt=6&postid=112430962254828763&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, August 12, 2005

என் இனிய அஸ்ஸாம் - பகுதி 4.



இங்கு இடதுபுறம் இருப்பது பிரம்மபுத்திரா நதி ஒரு அழகிய மாலை நேரம்...வலதுபுறம் இருப்பது பாலாஜி கோவில் எனும் பெருமாள் கோவில்.....ஹ்ம்ம்...எந்த இடத்தில் விட்டுச்சென்றேன்??? ஜேபி'ஸ் ரெஸ்டாரெண்ட்டில்தானே? சரி சரி எல்லோரும் பன்னீர் பட்டர் மசால் தோசை 48 ரூபாய் கொடுத்து ஆளுக்கு ஒன்னு வாங்கி சாப்பிட்டீங்களா? நல்லது...அப்படியே வெளிய வாங்க, இப்போ நீங்க பார்க்கறது ஃபேன்சிபஜார் பகுதி. இங்க குவஹாத்தில கொஞ்சம் நெருக்கடியான பகுதி இது..இங்க இருந்து கொஞ்சம் அப்படியே மேல வந்தீங்கன்னா சுக்ரேஷ்வர் மந்திர் (சுக்லேஷ்வர் மந்திர் அப்படினும் சொல்லறாங்க) இது ஒரு சிவாலயம், இந்த மாசம் (ஆகஸ்ட்) இங்க ரொம்ப விசேஷம், திங்கள் , வியாழன் தினங்களில் ஃபோல்பம் என்று ஒரு நிகழ்ச்சி, போன வாரம் நான் மேல் அஸ்ஸாம் (upper assam)போயிட்டு விடியற்காலம் வந்து இறங்கி எங்க ஐஐடி பஸ் பிடிக்கறதுக்கு வரேன், ஒரே கூட்டம், இங்க பேன்சி பஜார்ல இருந்து, ஒரு 15 கிலோமீட்டர் தொலைவில் வசிஷ்டா என்று ஒரு இடம் உண்டு, அங்கு வசிஷ்டமாமுனி அந்த காலத்தில் வாழ்ந்து தவம் செய்ததாக ஒரு நம்பிக்கை, இங்கு ஒரு திரிவேணி ஓடை இருக்கிறது.

அந்த ஓடையில் கங்கா, யமுனா, சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமித்து தரைக்கு வருவதாக ஐதீகம், அந்த ஓடையிலிருந்து நீர் முகர்ந்துகொண்டு வந்து, இங்கு சுக்ரேஷ்வர் கோவிலின் பின்புறமிருக்கும் பிரம்மபுத்திராவில் கலப்பார்கள், நதிகளின் சங்கமமே இதன் தத்துவம், நம் மானிலங்களில் மக்கள் அடித்துக்கொண்டு செய்ய நினைப்பதை, இங்கு சாதாரண பாமரன் கூட செய்ய நினைக்கின்றான். பாருங்கள்.

சரி , அது தாண்டி வந்தால் பான்பஜார் எனும் மிக முக்கியமான ஒரு மார்க்கெட் பகுதி, அதன் ஆரம்பமாக பானி டாங்கி எனும் தண்ணீர் தொட்டி நிறுத்தம். இங்கு இறங்கி நேரே சென்றால் லாக்டோக்கியா, இங்குதான் எங்கள் ஐஐடியின் நகர அலுவலகம் உள்ளது, இங்கிருந்தே நாங்கள் எங்கள் கல்வி நிலையத்திற்கு வர பேருந்து பிடிக்கவேண்டும், அதை விட்டால் வேறு பேருந்துகள் கிடையாது இந்த ஊரில்...பாருங்கள், இதே நம்ம சென்னை ஐஐடி அப்படினா 1000 பஸ், இங்க வெறும் ஐஐடி பேருந்து மட்டுமே ஐயா.....ஹ்ம்ம்ம்...அங்க இருந்து 10 நிமிட நடை பயணம் ரயிலடி, ரயிலடியின் பின்புறமே பேருந்து நிலையம். அங்கிருப்பது பால்டன் பஜார். அங்கு ஒரு தென்னிந்திய உணவகம் கேரளா பவன் என்று இருக்கிறது, உணவு சற்று விலை அதிகம்தான், அதைவிட சற்று தள்ளி வந்தால் ஒரு அருமையான உட்லேண்ட்ஸ் உணவகம், முதல்மாடியில் இருக்கிறது, அற்புதமான சைவ உணவு கிடைக்கும், மீன் மற்றும் கோழி வேண்டுமாயின் கேரளாபவனிலேயே சாப்பிடலாம்....

ஹ்ம்ம்ம்...அது கடந்துவரின் உள்ளுபாரி , அதைத்தாண்டி வரின், கணேஷ்குரி, பெரிய ஒரு பிள்ளையார் கோவில், அதைத்தாண்டி வரின் பங்காகர் எனும் ஒரு இடம், அரசு அலுவலகங்கள் அதீகம் இருக்குமிடம், மேலும் குவஹாத்தி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை உள்ளது இங்கு, இதைத்தாண்டி வரின் டவுந்தவுன்(downtown)மருத்துவமனை, ஒரு நல்ல மருத்துவமனை, அதனையும் கடந்து வரின், அஸ்ஸாமின் தலைநகர் என்று நாம் புத்தகங்களில் படித்த திஸ்பூர்...அங்குதான் நம்ம ஊர் கோட்டை மாதிரி தலைமைச்செயலகம் உள்ளது.

இதனைக் கடந்து செல்லுங்கால் நாம் அஸ்ஸாமின் எல்லைக்கு வருகிறோம், கானாபாரா என்னும் ஒரு சிறிய கிராமமே அஸ்ஸாமின் எல்லை, மேகாலயா மானிலத்தின் நுழைவுவாயில், நம் அண்டை மாநிலமாகிய பாண்டிச்சேரி போல ஒரு யூனியன் டெரிட்டரி, சரக்கு ;) சகாயமாகக்கிடைக்கும்...அஸ்ஸாம் எல்லையான கானாபாராவிலும் விலை குறைவாகவே கிடைக்கும் என்று கேள்வி ;). மேகாலயாவில்தான் ஷில்லாங் எனும் கோடைவாசஸ்தலமும் சேராபுஞ்சி எனும் சிரபுஞ்சி (உலகிலேயே அதிக மழை பொழியும் இடம், அந்த இடம் பற்றி அடுத்துவரும் பகுதிகளில் பார்க்கலாம், ஒரு தகவல் மட்டும் தருகிறேன், சேரா+புஞ்சி என்றால் ஒன்றுக்கும் உதவாத நிலம் என்று பொருள்.

சரி, இந்த பக்கம் வருவோமா? ரயில் நிலையத்தில் இருந்து இந்தப்பக்கம் வந்தால் உயர்நீதி மன்றம், அதன் அருகில் திகாலி புக்கூரி எனும் ஒரு அருமையான குளமும் பூங்காவும், இந்த குளத்தில் படகுகள் விடலாம், காலால் மிதித்து இருவர், நால்வர் என போகும் படகுகள், நன்றாக இருக்கும். குளம் என்று சொல்வதைவிட செயற்கை ஏரி என்றே சொல்லலாம், அதன் கரைகளில் அருமையாக திண்டுகள் போட்டு வைத்திருப்பார்கள் அருமையாக இருக்கும். ரயிலடியிலிருந்து நேராக வந்தால் மேகதூத் பவன் எனும் தலைமை அஞ்சல் நிலையம். அது கடந்து வரின் எதிரிலேயே பாரத மானில வங்கியின் மாநில தலைமை அலுவலகம் (State Bank of India- Regional zonal office). அது தாண்டி வரின், நேரு பார்க் எனும் ஹெரிடேஜ் பார்க், அஸ்ஸாமின் பழங்குடிகள் பற்றிய விளக்கப்பூங்கா, அற்புதமாக இருக்கும், அதுதாண்டி வரின், மியூசியம் எனும் அருங்காட்சியகம், அஸ்ஸாமின் பழைய கற்காலா நாகரிகங்களைப்பதிய வைத்திருக்கிறார்கள்...

தாண்டி வாருங்கள்,
நூலகம், ரிசர்வ் வங்கி, அம்பாரி , அடுத்து சில்புகுரி (புகுரி என்றால் குளம் என்று அர்த்தமாம் அஸ்ஸாமிய மொழியில், இங்கும் ஒரு குளம் உள்ளது, நம்ம மைலாப்பூர் குளம் போல) அங்கிருந்து மேலே சென்றால் ஒரு சிறு குன்றின்மேல் காந்தி மண்டபம் உள்ளது. இந்தப்புறம் வரின், சந்த்மாரி, ஒரு பெரிய சிற்றூர், அடுத்து நூண்மாட்டி, இங்குதான் அஸ்ஸாம் ரீபைனரீஸ் தன் கிளையை வைத்திருக்கிறது...இது தாண்டி சென்றால் மேலஸ்ஸாம் செல்லும் வழி...இதுவே குவஹாத்தி என்று சொல்லமாட்டேன், இருப்பினும் இதுபோதும் ஆரம்பத்தில் வருபவர்களுக்கு, இந்த இடங்களை முதலில் பார்வையிடுங்கள்....என் அடுதத பகுதியில் , தின்சுகியா, மற்றும் துலியாஜன், டிக்பாய் எனும் எண்ணைச்சுரங்கங்கள் இருக்கும் மேல் அஸ்ஸாம் பற்றியும், அதனைத்தொடர்ந்து அருகமைந்த மானிலங்களாம் மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் போன்றவற்றைப்பார்ப்போமா? ஒரு சுவாரசியமான விஷயம், நாகாலாந்தின் நாய்க்கறி ரொம்ப சுவையான ஒரு உணவாம், அதுபற்றியும் எழுதுவேன்.....தங்கள் பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் தொடர்ந்தே......
ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=1&postid=112387500530247779&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, August 05, 2005

பிரிவு என்பதே உறவுக்காகத்தான்

பிரிவு என்பதே உறவுக்காகத்தான்


முழுமதி வானில்தோன்றி மறைந்து
முதல் கதிர் என் கண்ணை தாக்கும்
உறங்கினாலும் உறங்காத உன் நினைவுகள்
உச்சந்தலையில் சிலிர் என்ற சிலிர்ப்பொடு
இரங்கும் முதல் துளி மழை போல்
என்றோ நீ வாசிதத அந்த கவிதை வரிகள்
தமிழ்தாய் வாழ்த்தாய் காதுகளில் ஒலிக்க
அன்றைய பொழுதை துவக்குவேன்
அகம் நிறைஉன் முகத்தோடு...
ஏன் இந்த மூன்று மாதத்தை
மூன்று மாதம் என்று நினைக்கிறாய்?
வெறும் 90 நாட்கள் என்று எடுத்துக்கொள்
90 நொடிகளாய் கரைந்துவிடுமே இந்த நாட்கள்
என்று நீ அன்று கூறியது
எனக்குநினைவுபடுத்தியது ஒரு வாசகத்தைதான்
பிரிவு என்பதே உறவுக்காகத்தான்
இந்த பிரிவும் நம்மை வலுவாக்கவே.
உனக்குத்தெரியுமா?
என் வீட்டில் நாட்காட்டிக்கு அருகே
எனக்காய் ஒரு நாட்காட்டி....
அதில் மாதத்திற்கு 30 நாட்களும் இல்லை
வருடத்திற்கு 365 நாட்களும் இல்லை
மொத்தம் தொன்னூறே நாட்கள்
ஒவ்வொரு நாளும் குறைவது
ஓராண்டுகுறைவது போல்?
உன் குரல் கேட்குமா என்று
என் தொலைபேசியை கேட்ட நாட்கள் எததனை?
உன் அஞசல் கானாமல் என்
மின்னஞ்சல் பெட்டியைஏக்கத்துடன்
மூடிய நாட்கள் எத்தனை?
ஆயிரம் இருப்பினும் இந்த
பிரிவு என்பதும் உறவுக்காகத்தானே???
type="text/javascript">&cmt=3&postid=112324521408423869&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 02, 2005

என் இனிய அஸ்ஸாம்....பகுதி 3.


காமாக்கியா தேவி கோவில், இது ஒரு அருமையான அற்புதமான கோவில், அமைதியாக இருக்கும். இந்த கோவிலுக்கான சரித்திர இதிகாசக்கதை இது தான், பார்வதி தேவி, தட்சனுக்கு மகளாகப்பிறந்திருந்த சமையம், சிவனை அவர் மணம் புரிந்து சிவபுரி சென்றதும் தட்சன் தன் இல்லத்தில் ஒரு யாகம் நடத்தினார். அதில் சிவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை (அவிர்பாகம்) கொடுக்காமல் தட்சன் யாகத்தை நடத்திட அதனை நிறுத்தி தன் கணவனுக்கான மரியாதையை பெற்றுவர கணவர் தடுத்தும் கேட்காமல் செல்லும் பார்வதி தேவி, அவமானமடைந்து, வேறு வழி தெரியாமல் அவன் மூட்டி இருந்த யாக நெருப்பினிலே குதித்து தற்கொலை செய்து யாகத்தை நிறுத்த, கோபமுற்ற சிவன் வந்து தட்சனைக்கொன்று யாகத்தைச்சிதைத்து தேவியின் ஸ்தூல உடலைத்தூக்கித்தோளில் போட்டுக்கொண்டு உலகமெங்கும் சுற்றிவர அவரது பாரம் தாங்காமல் பூமி மாதா கதற, விஷ்ணு தன் சக்கரத்தை அனுப்பி சிவனின் தோளில் இருந்த தேவியின் உடலை 108 துண்டுகளாக துண்டித்துப்போட்டு சிவனை சாந்தப்படுத்துமாறு அனுப்ப, அப்படி துண்டுகளாக விழுந்த அம்மனின் அங்கங்களே உலகில சக்திபீடங்களாயின.

அதில் அம்மனின் பிறப்புறுப்பு விழுந்த இடம் இந்த காமாக்கியா தலமாகியது, அதனால்தான் இந்த மாவட்டத்தின் பெயர் கூட, காமரூபம் (Kamrup District). அழகிய நிலாச்சல் மலைத்தொடரின் மத்தியில் அமைந்திருக்கும் இந்த கோவில் மிக சக்தி வாய்ந்தது. இங்கு அன்னைக்கு தனியாக பிரதிமை கிடையாது, உருவமோ சிற்பமோ இல்லை வழிபட, ஒரு சுற்று சுற்றி வந்து பின் உள்ளே இறங்கிப்பார்ப்போமாயின், சிறிது பள்ளத்தில் அன்னையின் பாதத்தில் ஒரு தெள்ளிய நீரூற்று இருக்கும், அந்த தண்ணீர் பிரசாதமாகத்தரப்படுகிறது அங்கு இருக்கும் பாண்டாக்களால், பாண்டாக்கள் என்றதும் நினைவிற்கு வருகிறது, நிறையபேர் இங்கு, பாண்டாக்கள் என்ற பெயரில் ( பாண்டாக்கள் என்றால் பண்டிதர்களாம்) பணம் பிடுங்குவார்கள். யாரிடமும் நாம் செல்லத்தேவை இல்லை, அப்படி கடவுளுக்கு பணம் போட வேண்டும் என்று தோன்றினால் , உள்ளே கருவறையில் அன்னையின் மீது ஒரு காணிக்கை போட்டால் போதும்.

ஹ்ம்ம்ம்....தீபாவளிக்கதைக்கு வருவோம், நரகாசுரனின் தாயார் இந்த காமாக்கியா தேவி, இறைவனிடம் சண்டையிட்டு தன் அன்னையின் கையினால் கொல்லப்படுமுன் என் மறைவுநாளை மக்கள் சந்தோஷமாகக்கொண்டாடட்டும் என்று சொல்லி மறைந்தாலும், தாய் அல்லவா? எனவே, தீபாவளியின் போது இங்கு வீடுகளில் ஒரு தீபம் மட்டும் வைத்து துக்கமிருப்பர். நான் சொல்வது, உண்மையான அஸ்ஸாமியர் இல்லங்களில், இங்கு குடி பெயர்ந்த , பெயர்ந்துகொண்டிருக்கின்ற வங்க தேசத்தினர், பீகார் மானிலத்தினர் போன்றோரைக்கேட்டால் தெரிய வாய்ப்புகள் குறைவே. இந்தக்கோவிலுக்கு வரும் நிறைய பேர், இந்த காமாக்கியா தேவி கோவிலுடன் திரும்பிச்சென்று விடுவார்கள், அப்படி செய்யும்கால் அவர்கள் ஒரு அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் இடத்தை ஒரு ஒரு மைல் தொலைவினில் தவற விடுகிறார்கள் என்றே சொல்வேன், அது .....புவனேஷ்வரி மந்திர்.

புவனேஷ்வரி தாயாரின் கோவில், காமாக்கியா கோவீலிலிருந்து மேல்ல் நோக்கிச் செல்லும் பாதையில் உச்சியில் இருக்கிறது, அங்கு ஒரு கம்பி இல்லா தந்தி நிலையமும் இருக்கிறது, அமைதியான இடம், அமர்ந்து ரசிக்கக்கூடிய இடம். ஒருபுறம் பார்க்க, அழகான பிரம்ம புத்திரா நதி ஒரு ஓவியம் போல ஓடும் காட்சி, மற்றொருபுறம் நிலாச்சல் மலைத்தொடரின் தொடர்ச்சி, ஒருபுறம் இந்தியத்தொழில்நுட்ப்பப்பயிலகம், ஒரு புறம் சராய்காட் பாலம், இப்படி சொல்லிக்கொண்டே செல்லலாம்...மேலும் காதலர்கள் மற்றும் இளம் தம்பதியர்களுக்கு ஒரு அருமையான அமர்ந்து பேசுமிடமாகவும் அருகில் சிறு பூங்காக்கள் அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள்...அவசியம் பார்க்கவேண்டிய ஒரு இடம், மற்ற இடங்கள் போல அது அசிங்கமாக நடந்து கொள்ளும் இடமெல்லாம் இல்லை, கடவுளின் உறைவிடமே.....எனவே தைரியமாகச்சென்று வரலாம். சரி அங்கிருந்து இறங்கி வருவோமா? வந்து அங்கிருந்து சற்று முன் செல்ல, பூதநாதர் ஆலயம் எனும் எரிகாடு, அதனைத்தாண்டிச்செல்ல, பராலுமுக் (Bharalumukh) எனும் முனை, பிரம்மபுத்திரா நதி , சாலையை ஒட்டியே ஓடும் அற்புதக்காட்சி காணக்கண்கோடி வேண்டுமே....ச்ங்கர்தேவ் பார்க், கரையில் அமர்ந்து பிரம்ம புத்திராவைப்பார்க்க ரசிக்க, கடந்துவருமின் ஜேபி'ஸ் ரெஸ்டாரெண்ட், நம்ம ஊர் மசால் தோசை, இட்லி, கடலை , காரச்சட்டினி அற்புதமாக இருக்கும்....

இது பற்றி நாளை பார்ப்போமா???
பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=2&postid=112299795017133898&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 01, 2005

இன்று நட்பு தினமாம்...

இனிய தோழனே என அழைக்க
ஈராயிரம் கோடி இதயங்கள் இருப்பினும்
அந்த இரண்டு இதயங்களுக்கே என்
இதய காணிக்கையை அளிக்க விருப்பம்...

செந்தில் , வில்சன், துணையாய் ஒரு
தூண் ஏசையா....
பள்ளி நாட்கள் பலவிதமாய் கழிந்தாலும்
கல்லூரி நாட்களைக் களிப்புடனே கழித்தாலும்
காலம் ஒரு காலனைப்போன்றதல்லவா?

அது கற்றுக்கொடுத்த பாடங்கள் எத்தனை?
அதன் வலி அனைத்தையும் நானே வாங்கியிருப்பின்
வதங்கிப்போய் இருப்பேனே நண்பா????
இறுதிவரை இடிதாங்கியாய் என்
இதயம் தாங்கினீரே நண்பா???

கடமையிலும் சரி
காதலிலும் சரி
எதுவேண்டும் என்றாலும் என்னோடு
நின்றாயே? எனக்காக எத்தனை நாள்?
பள்ளியிலும் பணியிலுமே
ஏச்சுக்கள் பேச்சுக்கள் வாங்கினாயே நண்பா?

முன்பின் முகமரியா
மூடப்பெண் ஒருவளிடமும்
முன்பே அறிமுகமாயினும்
முயலுக்கு மூன்றேகாலென்ற
முடிவரிந்த மங்கையிடமும்
நான் கூட கேட்டிருப்பேனா அப்படி?
அவள் தாழ் பணிய தயாராய் இருந்தீரே தோழா???

அவளுக்காக எழுதிய வரிகள் ஆயிரம் இருக்கலாம்
ஆயினும் தோழா,இந்த அருமையான தோழர் தினத்தில்
உங்களை நினையாவிடின் நான் உயிரில்லாப்பிணத்தின்
ஒப்பாவேன் என் அன்பு சோதரரே....

தாயினும் மேலாக என்
தமையர்களினும் உயர்வாக
என் தலை நிமிர்த்தி விட்ட உங்களுக்கு
என் தோழர் தின வாழ்த்துக்கள்...

இணையமோ, மின்னஞ்சலோ
அறியாத அவர்களுக்கு என்
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்...

மேலும்,

இணையத்தில் என் அறிமுகமாகி
இதயத்தில் இடம் கொடுத்து இடம் பெற்று
இணைபிரியாமல் என்னுடன் இருக்கும் என்
இனிய இணைய இதயங்களுக்கும் ஏனைய
இதயங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

இதயம் முழுதும் இளமை சுமந்த,
இனிய உங்கள்,
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=2&postid=112290548991184539&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது